முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுகிறார் அலோக் லம்பா

ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ. அலோக் லம்பா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகப் போவதாகத் தெரிவித்துள்ளார். ராஜினாமா கடிதத்தை டுவிட்டரில் அனுப்பி வைத்தால் கூட அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் சாந்தி சவுக் தொகுதி பெண் எம்.எல்.ஏ. அலோக் லம்பா. மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்குப் பின் கட்சியின் நிறுவனரும், முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீதான நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினார். இதையடுத்து எம்.எல்.ஏ.க்களுக்கான கட்சி தொடர்பான அதிகாரபூர்வமான வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து அலோக் லம்பா நீக்கப்பட்டார்.

மேலும், மக்களவைத் தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்யவும் மறுத்து விட்டார். முதல்வர் கெஜ்ரிவால் சாலையில் சென்று பிரச்சாரம் செய்த போது கூட உடன் செல்ல மறுத்த லம்பா காருக்குப் பின்னால் நடந்து சென்றார். அது மட்டுமல்லாமல் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பரத்வாஜுடன் டுவிட்டரில் கடந்த ஏப்ரல் மாதம் கடுமையாக வாக்குவாதம் செய்து அலோக் லம்பா பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ராஜீவ் காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி தீர்மானம் இயற்றிய போது அதை எதிர்த்து டெல்லி சட்டப்பேரவையில் அலோக் லம்பா வாக்களித்துப் பிரச்சினையை உருவாக்கினார்.

இந்த சூழலில் எம்.எல்.ஏ. அலோக் லம்பா கூறுகையில், கட்சியின் தலைமை மீது அதிருப்தி அடைந்த நான் ராஜினாமா செய்யப் போகிறேன். தனது தொகுதி மக்களிடம் நன்கு கேட்டு ஆலோசித்த பின்புதான் இந்த முடிவை எடுத்துள்ளேன். விரைவில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும், எம்.எல்.ஏ. பதவியில் இருந்தும் ராஜினாமா செய்ய உள்ளேன். அதன்பின் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெறுவேன். எனக்கு என்னுடைய கட்சியில் மதிப்பும் மரியாதையும் இல்லை எனத் லம்பா தெரிவித்துள்ளார். அலோக் லம்பா அறிவிப்பைக் கேட்ட ஆம் ஆத்மி கட்சியின் செய்தித்தொடர்பாளர் சவுரவ் பரத்வாஜ் டுவிட்டரில் பதில் அளிக்கையில், அலோக் லம்பா இத்துடன் பலமுறை கட்சியில் இருந்து விலகப் போவதாகத் தெரிவித்துள்ளார். ராஜினாமா கடிதத்தை எழுதி தலைமைக்கு கொடுக்க ஒரு நிமிடம் போதுமா? அலோக் லம்பா டுவிட்டரில் ராஜினாமா கடிதத்தை அனுப்பினால் கூட ஏற்கிறோம். அவரை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள் எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து