தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசிடமிருந்து ஆணைகளை பெற துணையாக இருக்கிறார் வெங்கையா - சென்னை விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம்

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2019      தமிழகம்
cm edapadi-venkaiah 2019 08 11

சென்னை : தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு இன்றும் மத்திய அரசிலிருந்து உரிய ஆணையை பெறுவதற்கு துணையாக இருந்து கொண்டிருக்கிறார் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டினார்.

.துணை ஜனாதிபதி பதவியில்.வெங்கையா நாயுடு இரண்டாண்டு நிறைவு செய்தது குறித்து வெளியிடப்பட்ட புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி மு.பழனிசாமி பங்கேற்று பேசியதாவது:-

காட்சிக்கு எளியன், கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் என்கிறது திருக்குறள். காண்பதற்கு எளியவராகவும், கடுஞ்சொல் பேசாதவராகவும் விளங்கும் அரசர் ஆளும் நாட்டை உலகம் புகழும் என்ற வள்ளுவரின் கூற்றுப்படி எல்லோரும் எளிதில் அணுகும்படியான எளியவராகவும், பள்ளி, கல்லூரி மாணவர்களையும், இளைஞர்களையும், பெண்களையும் கவர்ந்து இழுக்கக் கூடியவரும், எல்லோரும் விரும்பும்படியாக இனிமையாகபேசிப் பழகக் கூடியவராகவும், பாரத மக்களுக்காக அயராது பணியாற்றிக் கொண்டிருப்பவர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு. உழைப்பே உயர்வு என்ற பழமொழிக்கு இவர் வாழ்வே ஓர் உதாரணமாகும்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் 1949-ம் ஆண்டு ஜுலை 1-ம் தேதி பிறந்த இவர், படிப்பது மட்டுமின்றி ராஷ்ட்ரிய சுயம்சேவக் இயக்கத்தில் ஒரு எளிய தொண்டனாக சேர்ந்து தனது சமுதாயப் பணியினை துவக்கினார். பிறகு ஜனசங்கம், ஜனதா கட்சி, பாரதீய ஜனதாகட்சி ஆகிய கட்சிகளில் பல்வேறு பதவிகளை வகித்தார். பின்னர் பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக 2002-ம் ஆண்டு உயர்ந்தவர். 2000-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக பணியாற்றினார்.

வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர் - விம்கோ நகர் வரையிலான சென்னை மெட்ரோ ரயில் சேவையின் நீட்டிப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், இந்த விழாவில் கண்டிப்பாக வெங்கையா நாயுடு பங்கேற்பதற்கு ஏதுவாக நாடாளுமன்ற கூட்டம் நடைபெறாத நாளான சனிக்கிழமை அன்றுதான் நடத்தப்பட வேண்டும் என நான் உத்தரவிட்டிருந்தேன். இந்த விழாவில் வெங்கையா நாயுடு கலந்து கொண்டதில் நான் உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால், இந்த மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுத் தந்தது இவர்தான் என்று சொன்னால் அது மிகையாகாது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தமிழ்நாட்டின் உற்ற நண்பர் என்று கூறுவார்கள். அதே உறவும், அன்பும் இன்றளவும் நம் மீது வைத்திருப்பவர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.நிறுவனம் டிஜிட்டல் உரிமத்தை பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் அவர். மேலும், இவர் மத்திய நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த போது, என்னுடன் இணைந்து திருமங்கலம் முதல் நேரு பார்க் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை 14.5.2017 அன்று தொடங்கி வைத்த நிகழ்வு எனது மனதில் இன்னும் பசுமையாக உள்ளது. மேலும், அன்றே தலைமை செயலகத்தில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் மத்திய திட்டங்களை பற்றி ஆய்வு செய்து, நமது மாநில திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒப்புதலை பெறுவதற்கு ஒரு பாலமாக செயல்பட்டவர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு என்று சொன்னால்அது மிகையாகாது.

ஜெயலலிதாவுக்கு பின்னர் அவரது அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு இன்றும் மத்திய அரசிலிருந்து உரிய ஆணையை பெறுவதற்கு துணையாக இருந்து கொண்டிருக்கிறார். போற்ற வேண்டியவை உண்மை, உழைப்பு, உயர்வு. பின்பற்ற வேண்டியவை கனிவு, பணிவு, துணிவு. பேண வேண்டியவை கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அண்ணா பொன் மொழிகளின் அடிப்படையில் இன்றும் மக்கள் பணியாற்றிக் கொண்டிருப்பவர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு என்று சொன்னால் அது மிகையாகாது.

பல ஆண்டுகளாக மாநிலங்கள் அவையில் உறுப்பினராக பணியாற்றிய அனுபவம், அனைத்து கட்சியினரிடம் நண்பராக பழகும் இவரது இயல்பான குணம், ஆகியவை தான் வெங்கையா நாயுடுவை இன்று துணை ஜனாதிபதியாக உயர்த்தி இருக்கிறது. அரசுப் பதவியை விட மக்கள் பணி என்பதுதான் முக்கியம் என்ற கொள்கை பிடிப்பு கொண்டவர். ஏற்றுக் கொண்ட பதவிகளில் அனுபவங்களையும், அறிவையும், அர்ப்பணிப்பையும் கொண்டு திறமையாக பணியாற்றி, அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றவர் வெங்கையாநாயுடு என்று அவர் புகழாரம் சூட்டினார்.

இவர், தமிழ்நாட்டில் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில், தனது உரையின் ஆரம்பத்தில் சில நிமிடங்கள் தமிழில் உரையாடுவார். சமீபத்தில் சென்னையில் மாணவர்களிடையே பேசுகையில், தாய்மொழி கண் போன்றது என்றும், தாய்நாடு, தாய்மொழி மற்றும் பிறந்த ஊரை என்றென்றும் மறக்கக் கூடாது என்றும் ஒரு உயரிய அறிவுரையை கூறினார். வீட்டிலும், வெளியிலும் தாய்மொழியில் தான் பேச வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய இவர், தமிழும், தமிழ்நாடும் தன் மனதிற்கு நெருக்கமானவை என்றுகூறியுள்ளார்.

உலக அளவில் பல்வேறு நாடுகளிலிருந்து மருத்துவ சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் சென்னை மாநகரம் ஈர்த்து வருகிறது என்றும், மருத்துவ சுற்றுலாவில் தமிழ்நாடு ஒரு உயர்ந்த இடத்தைஅடைந்துள்ளதாகவும், சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி பெருமையுடன்குறிப்பிட்டிருந்தார். சமீபத்தில் நடைபெற்ற இரண்டாம் உலக முதலீட்டாளர் மாநாட்டின் நிறைவு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆற்றிய உரையில் தமிழ்நாடு கலாசாரம் பாரம்பரியத்தில் உயர்ந்த இடத்தை வகிக்கிறது என்றும் என்னுடைய இதயத்தில் தமிழ்நாடு நெருக்கமான இடத்தில் இருக்கிறது நான் மகிழ்ச்சியுடன் கற்றுக் கொண்ட மிகச் சிறந்த மாநிலம் தமிழகம் என்றும் நிதி ஆயோக்கில் சமூக பொருளாதார முன்னேற்றத்தில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என்றும் குறிப்பிட்டார். தமிழ்நாடு மற்றும் அதன் மக்கள் மீது இவர் வைத்துள்ள ஈடுபாட்டையும், அன்பையும், பாசத்தையும் காட்டுவதாக இந்த நிகழ்வுகள் உள்ளன. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Pillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு

அம்மியில் அரைத்து, மசாலா உதிராமல் மீன் வறுவல் | Traditional Fish fry in tamil | Viraal meen varuval

How to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil

Nattu kozhi Pepper Fry in Tamil | நாட்டு கோழி மிளகு கறி | Chicken Pepper fry | Country Chicken Fry

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Chicken Popcorn Recipes in Tamil |சிக்கன் பாப்கார்ன்|Crispy Fried Chicken|Chicken Recipes in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து