முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈத் பண்டிக்கையின் போது இந்த துயரம் தேவை தானா? ஏமனில் 40 பேர் பலியானது குறித்து ஐ.நா. கவலை

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

துபாய் : ஏமனில் அரசு சார்புப் படைகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் ஏற்பட்ட மோதலில் சுமார் 40 பேர் கொல்லப்பட்டது குறித்து ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. ஈத் பண்டிகையின் போது இத்தகைய துயரங்கள் தேவைதானா என்றும் அது கேள்வியெழுப்பியுள்ளது.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது. சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில் ஏமனின் இரண்டாவது நகரமான ஏடனில் ஆகஸ்ட் 4 அன்று தொடங்கி கடந்த நான்கு நாட்களாக நடந்து வரும் சண்டையில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். அரசு சார்புப் படைகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையிலான இந்த சண்டையில் சுமார் 40 பேர் கொல்லப்பட்டதாகவும் பொதுமக்கள் உட்பட 260 பேர் ஐ.நா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐ.நா. மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் லிஸ் கிராண்டே தெரிவித்ததாவது:-

குடும்பங்கள் அமைதியாகவும் ஒற்றுமையுடனும் ஒன்றாகக் கூடி மகிழும் பண்டிகையாக ஈத் விளங்குகிறது. இந்த கொண்டாட்ட தினத்தில் இப்படியொரு துயரம் தேவைதானா? மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய மனநிலைக்கு பதிலாக தங்கள் அன்புக்குரியவர்களின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது எனும் போது மனம் உடைகிறது. எங்கள் முக்கிய கவலை இப்போது காயமடைந்தவர்களை மீட்பதற்காக மருத்துவ குழுக்களை அனுப்புவதாகும். வீடுகளில் சிக்கியுள்ள பொதுமக்கள் உணவுக்காகவும் தண்ணீரிலிருக்காகவும் அலைகிறார்கள் என்ற செய்திகேட்டு மேலும் கவலை ஏற்படுகிறது. இத்தகைய மோசமான சூழ்நிலையில் போராளிகள்தான் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும். குடும்பங்கள் சுதந்திரமாக வெளியே செல்லவும், தங்கள் அத்தியாவசியப் பொருட்களை பாதுகாத்துக்கொள்ளவும் அவர்களுக்கு உதவ வேண்டும். பொதுமக்களுக்கு உதவ முன்வரும் மனிதாபிமான அமைப்புகளை தடையின்றி அணுக அதிகாரிகள் உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்றும் அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்று ஐ.நா.ஒருங்கிணைப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து