முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனமழை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை: கலெக்டர்களுக்கு முதல்வர் இ.பி.எஸ் அறிவுரை

ஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை  : கனமழை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.,

கேள்வி :- இப்பொழுது மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழை பாதுகாப்பு நடவடிக்கை என்ன செய்திருக்கிறீர்கள்?
பதில் :- ஏற்கனவே, தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் கூட்டப்பட்டு, கனமழை பெய்கின்ற இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று அந்தந்த மாவட்ட கலெக்டருக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருக்கிறது.
கேள்வி :- மேட்டூர் அணையில் 25,000 கனஅடி திறக்க வேண்டுமென்று தொடர்ச்சியாக கோரிக்கை வருகிறதே?
பதில் :- மழை பெய்து கொண்டிருக்கிறது. மழையை கணக்கிட்டுத்தான் தண்ணீர் திறந்து கொண்டிருக்கின்றோம். தண்ணீர் சென்றவுடனேயே விவசாயிகள் அதை பயன்படுத்துவதில்லை. நாற்று நட்டபிறகு தான், அதை எடுத்து நடவு செய்வார்கள், கிட்டத்தட்ட ஐந்து, ஆறு நாட்கள் கழித்து விவசாயிகளுக்கு கூடுதலாக எவ்வளவு தண்ணீர் தேவையோ அந்த அளவிற்கு தண்ணீர் திறக்கப்படும்.
கேள்வி :- புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில், பொதுமக்களிடம் கருத்து கேட்பதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று கல்வியாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறதே?
பதில் :- வெளிப்படைத் தன்மையோடு தான் அரசு இருக்கின்றது. பத்திரிகை மற்றும் ஊடகத் துறை நண்பர்கள் எல்லாவற்றையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறீர்களே. இப்பொழுது ஊடகமும், பத்திரிகையும் அடுத்த நொடியே மக்களுக்கு செய்தி செல்கின்ற அளவிற்கு தமிழகம் ஒரு விழிப்புணர்வு உள்ள மாநிலமாக இருக்கின்றது. அரசைப் பொறுத்தவரைக்கும் கல்விக் கொள்கையிலே திடமாக இருக்கின்றது. மொழிக் கொள்கையை பொறுத்தவரைக்கும், நாங்கள் இருமொழிக் கொள்கை தான் பின்பற்றப்படும் என்று தெளிவாக சுதந்திர தின விழாவில் நான் தெளிவு படுத்தியிருக்கிறேன்.
கேள்வி :- அனைத்து மாவட்டங்களும் பிரிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் சொல்லியிருக்கிறாரே?
பதில் :- பெரிய மாவட்டங்களெல்லாம் இரண்டாகப் பிரிக்க வேண்டுமென்று பொது மக்களிடத்திலிருந்தும், தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற பிரதிநிதிகளிடத்திலிருந்தும் கோரிக்கைகள் வந்தது. அதன் அடிப்படையில், பெரிய மாவட்டங்களெல்லாம் முதலிலே பிரிக்கப்படுகின்றது.
கேள்வி :- பள்ளிகளில், ஜாதி கயிறு கட்டுவது என்பது குழப்பத்தை உருவாக்கியிருக்கிறது..?
பதில் :- ஒன்றும் குழப்பமில்லை, ஊடகங்கள் அளித்திருக்கும் செய்தியின் அடிப்படையில், அவர் கருத்தை தெரிவித்திருக்கிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து