முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் 3 மாத காலத்திற்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : ரூ. 500 கோடி மதிப்பீட்டில் 5000 சிறுபாசன ஏரிகளும், 25,000 குளங்கள் மற்றும் குட்டைகள் இயந்திரங்களைக் கொண்டு தூர்வாரும் பணிகள் மற்றும் மதகுகள், கலங்குகள் சீரமைக்கும் பணிகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்றும், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் 3 மாத காலத்திற்குள் தரமான மற்றும் போதுமான மழைநீர் சேகரிப்பு கட்டடமைப்புகளை ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

மழை சேகரிப்பு பணி ஆய்வு

சென்னை உள்ளிட்ட 14 மாநகராட்சிகள், 122 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் மற்றும் 12,524 ஊராட்சிப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுவது குறித்தும் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், கட்டிட அனுமதி வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்தும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்களிடம் சென்னை மாநகராட்சியின் அம்மா மாளிகையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விரிவான ஆய்வு மேற்கொண்டார். மாநில அளவிலான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் குறித்த அலுவலர்களுக்கான செய்முறை விளக்க கருத்தரங்கையும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி துவக்கி வைத்தார். இக்கருத்தரங்கில் அமைச்சர் வேலுமணி தலைமையில் மழைநீர் சேகரிப்பு குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது,

நிலத்தடி நீர் ஆதாரங்களை புனரமைத்து புத்துயிர் அளிப்பதோடு, நீர்த்தேக்கங்களை மேம்படுத்தவும் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தினை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2001-ல் தொடங்கினார். இந்தியாவிலேயே மழைநீர் சேகரிப்புத் திட்டம் செயல்படுத்துவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. கட்டிட அனுமதி வழங்குவதற்கு, அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பினை கட்டாயமாக அமைக்க உரிய சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

வார்டு வாரியாக குழு

மாநகராட்சியின் மண்டல அலுவலர் மற்றும் சென்னை குடிநீர் வாரியத்தின் வட்டார பொறியாளர் ஆகியோர் தலைமையில் வார்டு வாரியாக ஒரு குழு வீதம் 200 குழுக்கள் அமைக்கப்பட்டு மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் சுமார் 2 லட்சம் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஆய்வு செய்திட கடந்த ஜூன் 29-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த பணியில் இதுவரை 2.35 லட்சம் கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 1.36 லட்சம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டடமைப்புகள் நல்ல நிலையில் உள்ளன. 3,850 கட்டிடங்களில் புதியதாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பராமரிப்பு இல்லாமல் இருந்த 210 நீர்நிலைகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 13 நீர் நிலைகள் தனியார் நிறுவனங்கள் மூலம் சமூக பொறுப்பு நிதியிலிருந்தும், 9 குளங்கள் மூலதன நிதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.11.91 கோடியிலும் ஆக மொத்தம் 22 நீர்நிலைகள் கடந்த ஆண்டில் புனரமைக்கப்பட்டது. சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் வில்லிவாக்கம் ஏரி உட்பட 64 குளங்களில் ரூ. 55 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும்.

நகராட்சிகளில் நீர் நிரப்பும் பணி

ராமநாதபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, பெரம்பலூர் நகராட்சிகள் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 5 நீர் நிலைகள், உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்புதல் நிதியில் ரூ. 6.14 கோடியில், புனரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம் பெரிய ஏரி, கீழ்கட்டளை ஏரி, புனரமைப்பு பணிகள் தமிழ்நாடு நகர்புர வளர்ச்சி திட்டத்தின் மூலம் ரூ.14.98 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. ஈரோடு மாநகராட்சி மற்றும் அரியலூர், நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, காரைக்குடி மற்றும் சாத்தூர் ஆகிய 6 நகராட்சிகளில் 42 நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக ஜெர்மன் மேம்பாட்டு வங்கி நிதி திட்டத்தின் கீழ் ரூ. 38.24 கோடியில் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

1201 ஏரிகளில் முட்புதர்கள் அகற்றம்

சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.308 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர் மாநகராட்சியில் 8 நீர் நிலைகளில் புனரமைப்பு பணிகள் எடுக்கப்பட்டு அதில் 3 பணிகள் முன்னேற்றத்திலும் மீதமுள்ள குளங்கள் ஒப்பந்தப்புள்ளி நிலையிலும் உள்ளன. மேலும் தஞ்சாவூர் மாநகராட்சியில் ரூ. 10.25 கோடி மதிப்பீட்டில் 2 நீர் நிலைகளில் புனரமைப்பு பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன. 528 பேரூராட்சிகளில் உள்ள 14 ஆயிரம் அரசு கட்டிடங்கள் 24.12 லட்சம் வீடுகள், 2.34 லட்சம் வணிக மற்றும் தொழிற்சாலை இடங்களில் முறையே 26.60 லட்சம் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 70,368 நீர் நிலைகளான சிறுபாசன ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகள் உள்ளன.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2011 முதல் 2015 வரையிலான 5 ஆண்டுகளில் 50,767 சிறுபாசன ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகள் ரூ. 2,200 கோடி மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டுள்ளன. 2016-17 முதல் 2017-18 வரையிலான 2 ஆண்டுகளில் 16,508 சிறுபாசன ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகள் ரூ. 877 கோடி மதிப்பீட்டில் தூர் வாரப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளில், 22,347 தடுப்பணைகள் ரூ. 485 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பணைகளில் தற்போது பெய்த மழையினால் நல்ல பயன் தந்துள்ளது.

5 ஆயிரம் ஏரிகள், 25 000 குளங்கள் சீரமைப்பு

சட்டப்பேரவையில் விதி-110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததற்கிணங்க, கிராமப்புறங்களில் தண்ணீரை சேமித்து பாசனத்திற்கு பயன்படுத்திடவும், நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்திடவும், தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் உள்ள வாய்க்கால்கள், ஓடைகள் மற்றும் கால்வாய்களின் குறுக்கே தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களைக் கொண்டு தற்போது 10,000 தடுப்பணைகள் கட்டும் பணிகள் ரூ. 312 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்டுள்ளன. மேலும், மாநில நிதியின் மூலம் 5000 சிறுபாசன ஏரிகளும், 25,000 குளங்கள், குட்டைகள் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் இயந்திரங்களைக் கொண்டு தூர்வாருதல் மற்றும் கரைகள் பலப்படுத்தும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. மேலும், அவற்றிலுள்ள மதகுகள், கலங்குகள் திட்டத்தின் கீழ் ரூ. 750 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இப்பணிகள் அனைத்து செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

மேலும், அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்பு கட்டிடங்கள் உட்பட அனைத்து அரசு கட்டிடங்கள், வணிக வளாகங்கள், அனைத்து தொழிற்சாலை கட்டிடங்கள், பெரும் வணிக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்கள், தனிக் குடியிருப்புகள், பண்னை வீடுகள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள், கார்பரேட் நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களிலும், மேலும், சாலை ஓரங்களிலும், பொது இடங்களிலும், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் விரைந்து ஏற்படுத்திட வேண்டும் என அமைச்சர் வேலுமணி அறிவுறுத்தினார்.

3 மாதத்திற்குள் தரமான கட்டமைப்பு

மேலும் , நீர்நிலைகள் மற்றும் குளங்களை சுற்றியுள்ள கட்டிடங்களில் சேகரிக்கப்படும் மழைநீர், நேரடியாக இந்நீர்நிலைகளில் சென்று சேர்க்கப்பட வேண்டும் எனவும், மனைகளின் பரப்பளவிற்கு ஏற்ப மழைநீர் கட்டமைப்புகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் ஏற்படுத்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்டது போன்று அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ஒருங்கிணைந்த குழுக்கள் அமைத்து மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருவதை அன்றாடப் பணியாக கண்காணிக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து வகையான கட்டிடங்களிலும், மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீரை உயர்த்தும் கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இப்பணிகள், அனைத்து கட்டிடங்களிலும் 3 மாத காலத்திற்குள் தரமான மற்றும் போதுமான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

அமைச்சருடன் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்

தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 34 நீர்நிலைகளை சமூக பொறுப்பு நிதியின் மூலம் புனரமைக்க 14 தனியார் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் .ஹர்மந்தர் சிங், சென்னை மாநகராட்சியின் ஆணையர் கோ.பிரகாஷ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் மகேஸ்வரன், பேரூராட்சிகளின் இயக்குநர் பழனிச்சாமி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் கூடுதல் இயக்குநர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள், அனைத்து மாவட்டங்களிலிருந்து வருகை புரிந்துள்ள திட்ட இயக்குநர்கள், செயற்பொறியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து