முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் - சேலத்தில் முதல்வர் எடப்பாடிதுவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சேலம் : சேலம் மாவட்டம், நங்கவள்ளியில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தினை முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்து நலத்திட்டஉதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து எடப்பாடி மற்றும் கொங்கணாபுரத்தில் இந்த திட்டத்தினை துவக்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

எடப்பாடி தொகுதி மக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து அம்மாவின் அரசு நிறைவேற்றி வருகின்றது. எடப்பாடி தொகுதி மக்களின் கோரிக்கைகளை ஏற்று, உயர்கல்வி கற்பதற்கு அம்மா, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை வழங்கி, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணாக்கர் பயிலக்கூடிய சூழ்நிலையை உருவாக்கித் தந்தார்.  அம்மாவின் அரசினால், ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவமனை கட்டிடம், கவுண்டம்பட்டியிலிருந்து வெல்லாண்டிவலசு வரை பாலம், கவுண்டம்பட்டியிலிருந்து நகரத்திற்கு வருவதற்கான நடைபாலம், பால் சொசைட்டி, கூடுதல் பள்ளிக் கட்டிடம், மாதிரி பள்ளி ஆகியவை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. எடப்பாடியிலிருந்து பல்வேறு நகரங்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக பேருந்து வசதிகளை செய்யப்பட்டுள்ளது. சித்தூரில் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. எடப்பாடியிலிருந்து புறவழிச் சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் மின்சார கோட்ட அலுவலகம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளை அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற விளை பொருட்களை சேமித்து வைக்க மார்கெடிங் கமிட்டி மூலம் வெள்ளரி வெள்ளியில் கிடங்கு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. சரபங்கா நதியின் இரண்டு பகுதிகளும் சீர் செய்யப்படும். சரபங்கா நதியின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும். கோனேரிப்பட்டியில் கட்டிக் கொடுத்த ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்த ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்படும். தொழில் வளத்தைப் பெருக்க, எட்டிக்குட்டைமேட்டில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, மேட்டூரிலிருந்து வரும் உபரி நீரை நீரேற்று மூலம், ரூபாய் 565 கோடி மதிப்பீட்டில் மேட்டூர், ஓமலூர், சங்ககிரி, எடப்பாடி சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 100 ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  எடப்பாடி நகர மக்களுக்குத் தேவையான குடிநீர் வழங்கிட, பூலாம்பட்டியிலிருந்து தண்ணீர் எடுத்து, சுத்திகரித்து வழங்கும் திட்டத்தினை அம்மா துவக்கி வைத்தார்.

எடப்பாடி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி ஒன்றியங்களை உள்ளடக்கிய கூட்டுக் குடிநீர் திட்டம் உருவாக்கி பாதுகாக்கப்பட்ட காவேரித் தண்ணீர் வழங்கப்படுகிறது. மேலும், விடுபட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விரைவில் காவேரிக் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். திருச்செங்கோட்டிலிருந்து ஓமலூர் வரையுள்ள சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றியமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகிலுள்ள சாலை, ரூபாய் 3.50 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எட்டிக்குட்டைமேட்டில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளாளபுரத்தில் மாதிரிப் பள்ளி கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. எட்டிக்குட்டைமேட்டில் க்ஷ.நுன., கல்லூரி இந்த ஆண்டு துவங்கப்படவுள்ளது. சமுத்திரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு கொங்கணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. கொங்கணாபுரத்தில் பேருந்து நிலையம், சாக்கடை வசதி, கொங்கணாபுரம் சந்திப்பில் நீரூற்று போன்ற பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. கொங்கணாபுரத்தில் புதிய காவல் நிலையம் அமைக்கப்பட்டு அதற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சிறந்த சாலை வசதிகளை அமைத்துக் கொடுத்த அரசு அம்மாவின் அரசு. இந்திய அளவில், மருத்துவம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கின்றது.  குடிமராமத்துத் திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக 2017-2018ஆம் ஆண்டில் 1519 ஏரிகளும், இரண்டாம்கட்டமாக 2018-2019ஆம் ஆண்டில் 1511 ஏரிகளும் தூர்வாரப்பட்டுள்ளன. 2019-2020ஆம் ஆண்டில் ரூபாய் 500 கோடி மதிப்பீட்டில் 1829 ஏரிகளில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகளையும், ஆயக்கட்டுதாரர்களையும் ஈடுபடுத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நதிகள், ஓடைகளின் குறுக்கே தடுப்பணைகள் அமைக்க ரூபாய் 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஓசூரில் மிகப்பிரம்மாண்டமான உலகத் தரத்தில் மலர் ஏல மையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.

எல்லாம் வல்ல இறைவன் அருளால், மேட்டூர் அணையின் நீர்மட்டம்  115 அடியை எட்டியுள்ளது. தற்பொழுது அணைக்கு சுமார் 33 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. எனவே, எஞ்சிய 5 அடியும் உயர்ந்து விரையில் அணை நிரம்பும். இதன் மூலம் மேட்டூர் மேற்கு மற்றும் கிழக்குக்கரை விவசாயிகள் மற்றும் டெல்டா பாசன விவசாயிகளுக்குத் தேவையான தண்ணீர் வழங்கப்படும். பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி வரும் ஒரே அரசு அம்மாவின் அரசு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து