முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலத்தில் புதிய சட்டக்கல்லூரி - முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சேலம் : சேலத்தில் நேற்று புதிய சட்டக் கல்லூரியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் முதல்வர் எடப்பாடிபழனிசாமி பேசியதாவது,

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சட்டக் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு குறைந்த செலவில் சட்டக் கல்வி வழங்கிட புதிய 3 அரசு சட்டக் கல்லூரிகள் இந்த ஆண்டு துவங்கப்பட உள்ளன. இதற்காக ரூபாய் 9 கோடியே 52 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சேலத்தில் புதிய சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்பக் கட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு தனி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு போதுமான உட்கட்டமைப்பு வசதிகளுடன் ரூபாய் 7 கோடியே 70 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படவுள்ளது.

    தெற்காசிய நாடுகளில் சட்டக் கல்விக்கென தோற்றுவிக்கப்பட்ட முதல் பல்கலைக் கழகம் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் தான். ஆசியாவிலேயே மிகக்குறைந்த கட்டணத்தில் தரமான சட்டக்கல்வியை இப்பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது.  இந்தப் பல்கலைக்கழகத்திற்கென தனியாக சென்னை பெருங்குடியில் 62 கோடி ரூபாய் செலவில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய வளாகம்  அமைக்கப்பட்டு, அம்மாவால் திறந்து வைக்கப்பட்டது. மேலும் இப்பல்கலைக்கழக விரிவாக்க பணிகளுக்காக கூடுதலாக 10 ஏக்கர் நிலம் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 13 சட்டக் கல்லூரிகளில் 11  சட்டக் கல்லூரிகள் அரசு சட்டக் கல்லூரிகளாகும். சென்ற ஆண்டு விழுப்புரம், தருமபுரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய இடங்களில் புதியதாக அரசு சட்டக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த சட்டக்கல்லூரிக்களுக்கென சொந்தக் கட்டிடங்கள் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் விரைவாக முடிக்கப்படும். திருச்சிராப்பள்ளி மாவட்டம்  ஸ்ரீரங்கம் வட்டம், நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் 25 ஏக்கர்  பரப்பளவில் 79 கோடியே 22 லட்சம்  ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளி அம்மாவால் நிறுவப்பட்டது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம், பெருங்குடி வளாகத்தில் அனைத்திந்திய செய்தியாளர் சட்ட உதவித் தொகுதி என்ற திட்டத்தினை நிறுவியுள்ளது.  சட்ட மாணவர்களுக்கு சிறந்த சட்டக் கல்விப் பயிற்சியை அளிப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கமாகும். அம்மா அரசின் இடையறாத முயற்சியின் காரணமாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள்  தமிழ் மொழியில் வெளியிடப்பட்டு வருகின்றன. உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசிடம் அம்மாவின் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

நீதித்துறையில் மின்னணு ஆளுமை முறைகளை புகுத்துவதன் அவசியத்தையும். அதனால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகளையும் கருத்தில் கொண்டும், இத்துறையில் முழுமையாக மின்னணு  ஆளுமை முறைகளை கொண்டு வர ஏதுவாக நீதிமன்றங்களில் நீதிமன்றங்களில் நீதிசார்ந்த மின்னணு முத்திரைத்தாள் முறையினை புகுத்திட வேண்டுமென்ற  உயர்நீதிமன்றத்தின் கோரிக்கையை ஏற்று, அம்மாவின் அரசால் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நீதித்துறையில் கணினிமயமாக்கல் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு போதுமான நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவர ஏதுவாக பல்வேறு பதவிகளுக்கு 1188 பணியிடங்கள் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ளன.    விரைவாக நீதி கிடைக்கச் செய்வதை கருத்தில் கொண்டு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பணியாளர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் நீதிமன்றங்களின் தேவைகளுக்கு ஏற்ப உடனுக்குடன் நிறைவேற்றும் உணர்வு கொண்ட அரசாக அம்மாவின் அரசு செயல்பட்டு வருகிறது.

சட்டப் பேரவை உறுப்பினர்கள் வெங்கடாசலம் மற்றும் வெற்றிவேல் ஆகியோரது கோரிக்கையை ஏற்று ஓமலூரிலிருந்து முத்துநாயக்கன்பட்டி, பாலக்குட்டப்பட்டி, கே.ஆர்.தோப்பூர்,  காடையாம்பட்டி வழியாக 6 நடைகள் காலை, மதியம், மாலை நேரங்களில் புதிய வழித்தடத்தில் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திலே முதன்முதலாக சேலம் மாநகரத்தில் தான் சுமார் 67.5 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் கூடிய பஸ்போர்ட் அமையவிருக்கிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, சேலம் மாநகராட்சியில் பொதுமக்கள் காலையிலும், மாலையிலும் நடைப்பயிற்சி செய்திடவும்  பொழுதுபோக்கவும் 18 பூங்காக்களை அமைத்திருக்கிறோம்.     ஏற்கனவே தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பாதாள சாக்கடைத் திட்டம் துவக்கி இடையில் சரியான முறையில் ஒப்பந்தக்காரர்களுக்கு பணியை ஒப்படைக்காத காரணத்தினால் பணி பாதியிலேயே நின்று விட்டது. அதை மீண்டும் துவக்கி அந்தத் திட்டத்தையும் செயல்படுத்தி இருக்கின்றோம். சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அம்மாவால் சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு என 3 தாலுகாக்கள் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டு அவற்றிற்கு புதிய கட்டடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. 

துணை மேயராக இருந்த நடேசன், மணியனூரில் பள்ளிக்கூடம் தேவையென்று வைத்த கோரிக்கையை ஏற்று அம்மாவால் திறந்து வைக்கப்பட்டது. அந்த இடத்தில்தான் புதிதாக தொடங்கப்படவுள்ள சட்டக் கல்லூரியும் தற்போது இயங்கவுள்ளது. அதேபோல், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சேலம் மாநகரில் ரூபாய் 948 கோடியில் பிரம்மாண்டமான பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம். இதில், குடிநீர் விநியோகத்திற்காக ரூபாய் 165 கோடியும், பாதாள சாக்கடைத் திட்டத்திற்காக ரூபாய் 145 கோடியும், பழைய பேருந்து நிலையத்தை இரண்டடுக்கு பேருந்து நிலையமாக கட்டுவதற்கு ரூபாய் 92 கோடியும், நேரு கலையரங்கத்தை அனைத்து அம்சங்களுடன் கூடிய சிறந்த கலையரங்கமாக உருவாக்கிட ரூபாய் 72 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் குமரகிரி ஏரி மற்றும் பள்ளப்பட்டி ஏரிகளை புனரமைப்பு செய்யவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. மேலும், பாதாள சாக்கடைத் திட்டம், பூமிக்கடியில் வயர் பதிக்கப்பட்டு மின் இணைப்பு திட்டம் ஆகியவையும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அன்னபூர்ணா மருத்துவக் கல்லூரிக்கு எதிரில் சேலம் அரசு சட்டக் கல்லூரிக்கான புதிய கட்டிடங்கள் இந்த ஆண்டே கட்டப்பட்டு அவ்விடத்தில் மாணவர்கள் பயிலக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்படும். சேலம் மாநகரில், திருமணிமுத்தாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கு ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரிகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அம்மாவின் அரசு, சொல்வதை நிறைவேற்றுகின்ற அரசு. சேலம் வளர்ந்து வருகின்ற மாநகரம். எதிர்காலத்தில் வெளிநாட்டிற்கு இணையாக உருவாக்கிக் காட்டுவோம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து