முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்வோருக்கு வீடுகள் கட்டித் தரப்படும்: முதல்வர் உறுதி

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் அனைவருக்கும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்றும் பேரூராட்சிப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டித்தரநடவடிக்கை மேற்கொள்வோம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்து நலத்திட்டஉதவிகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தில் இருக்கின்ற ஏழை, எளிய மக்களின் குறைகளை விரைந்து தீர்ப்பதற்கு அரசு அதிக முன்னுரிமை கொடுத்து, முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மனுதாரர்களின் தகுதியான மனுக்களுக்கு நிவர்த்தி காணப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். வீடில்லாத ஏழை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதை லட்சியமாக எண்ணி அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், மத்திய, மாநில அரசுகள் இணைந்து வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் வீடில்லா மக்கள் அனைவருக்கும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். பேரூராட்சிப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனை விரைவாக செயல்படுத்த அரசு திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

பொதுப்பணித் துறை மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் 39,000 ஏரிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஏரிகளை எடுத்து தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும். ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்கள், குட்டைகள், ஊரணிகளில் தண்ணீரை சேமிக்க ரூபாய் 1,250 கோடி மதிப்பீட்டில் திட்டம் தீட்டப்பட்டு, அப்பணிகளும் துவங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால், பொழிகின்ற மழை நீர் சேமிக்கப்படுவதுடன், நிலத்தடி நீர் உயரக் கூடிய வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. உடலுக்கு உயிர் முக்கியம் போல் விவசாயத்திற்கும், மக்களுக்கும் நீர் முக்கியம். எனவே, இத்திட்டத்தில் விவசாயப்பெருங்குடி மக்களும், விவசாயத் தொழிலாளர்களும், பொதுமக்களும் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். கண்ணுக்கு இமை போல ஏரிக்கு இமையாக இருந்து இத்திட்டம் வெற்றியடைய ஒத்துழைக்க வேண்டும்.

ஓடைகள், நதிகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதற்கு 3 ஆண்டு காலத் திட்டமாக ரூபாய் 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இரண்டாண்டு காலத்தில் தடுப்பணை கட்டுவதற்கு ரூபாய் 600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள்நடைபெற்று கொண்டிருக்கின்றது. சுகாதாரத் துறையின் மூலம் ரூ.97 லட்சம் மதிப்பீட்டில் 4 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் மற்றும் 239 கி.மீ. சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், ரூ.10 கோடி மதிப்பீட்டில் சாலைகளை அகலப்படுத்தி புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ. 25,000 நிதியுதவியுடன் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2,241 பயனாளிகளுக்கு ரூ. 5.60 கோடி நிதியுதவியும், 9,828 கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பட்டம், பட்டயம் படித்த ஏழை பெண்களுக்கு ரூ. 50,000 நிதியுதவியிடன் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 1,526 பயனாளிகளுக்கு ரூ. 7.63 லட்சம் நிதியுதவியும், 7,172 கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 917 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல திட்டங்களை மக்களுக்காக அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது. ஆனால், எதிர்க்கட்சிகள் அரசுக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக வேண்டுமென்றே, திட்டமிட்டு தவறான பொய்யான செய்தியை பரப்பி வருகின்றார்கள். அ.தி.மு.க. அரசு மக்களின் அரசு, மக்களுக்கான திட்டங்களை அளிப்பது தான் லட்சியம். அந்த லட்சியப் பாதையில் அ.தி.மு.க. அரசு சென்று கொண்டிருக்கின்றது. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோர் கொண்டு வந்த திட்டங்களை சிந்தாமல் சிதறாமல் மக்களின் இல்லங்களுக்கு கொண்டு சேர்க்கின்ற அளவிற்கு அரசு செயல்பட்டு கொண்டிருக்கின்றது.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து