முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் அருகே மழை வேண்டி 7 கிராம மக்கள் கோவிலில் கிடா வெட்டி வழிபாடு

வெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2019      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல் அருகே மழை வேண்டி 7 கிராம மக்கள் கோவிலில் கிடா வெட்டி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர், வடமதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போதிய மழை இல்லாததால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த சிரமத்தில் இருந்து வந்தனர். மாவட்டத்தின் சில பகுதிகளில் ஓரளவு மழை பெய்த போதும் அய்யலூர், வடமதுரை பகுதிகளில் போதிய மழையின்றி விவசாயத்திற்கு தண்ணீர் இன்றி கவலையில் இருந்தனர். எனவே அய்யலூர் வண்டி கருப்பணசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்ய முடிவு செய்தனர். தங்கம்மாபட்டி, கெச்சாணிபட்டி உள்ளிட்ட 7 கிராம மக்கள் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டனர். ஒரு கிராமத்திற்கு ஒரு ஆட்டுக்குட்டி என மொத்தம் 7 ஆடுகளை மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
பின்னர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து அந்த ஆடுகள் பலியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து அந்த ஆடுகளைக் கொண்டு அசைவ உணவு தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மாலையில் தொடங்கிய இந்த விருந்து இரவு வரை நீடித்தது. சுற்றுப்புற கிராம மக்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த விருந்தில் கலந்து கொண்டு உணவருந்தி சென்றனர். மேலும் கருப்பணசாமிக்கு காணிக்கை செலுத்தி சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன. இதன் மூலம் அய்யலூர், வடமதுரை மட்டுமின்றி சுற்றுப்புற பகுதிகளில் மழை பொழியும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இந்த வழிபாடு நடத்திய பின்பு நேற்று திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து பூமியை குளிர வைத்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து