முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சா் அருண்ஜெட்லி காலமானார் - அடுத்தடுத்து இருபெரும் தலைவர்கள் மறைவால் பாரதிய ஜனதா அதிர்ச்சி

சனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாதுகாப்பு துறை அமைச்சரும், பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான அருண் ஜெட்லி நேற்று நண்பகல் 12 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 66. அருண்ஜெட்லி மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். சுஷ்மா ஸ்வராஜ், அருண்ஜெட்லி ஆகியோரது அடுத்தடுத்த மறைவு பாரதீய ஜனதா கட்சிக்கு மிகப் பெரும் இழப்பாகவே கருதப்படுகிறது.

தீவிர சிகிச்சை

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நண்பகல் 12 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. முன்னதாக கடந்த 9-ம் தேதியன்று அவருக்கு மிக கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சோர்வான நிலையில் அவர் தளர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் பிரச்சனைக்காக அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மறுநாளே மோசமான நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து

அவருக்கு உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு மூத்த மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே கடந்த வாரம் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று அருண் ஜெட்லியின் உடல் நலம் குறித்து விசாரித்து சென்றனர்.

காலமானார்

இந்த நிலையில் அருண் ஜேட்லி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானதாக தெரிவிக்கப்பட்டது. அருண் ஜெட்லிக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இதற்கிடையே தனது வெளிநாட்டு பயணத்தை நிறைவு செய்த பிறகு பிரதமர் மோடி, அருண் ஜெட்லியை காண எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்வார் என தகவல் வெளியாகி இருந்த நிலையில் அருண் ஜெட்லி நேற்று நண்பகலில்  காலமானார்.

பா.ஜ.க. மூத்த தலைவரான ஜெட்லி  மத்திய நிதி அமைச்சராக பதவி வகித்தவர். நிதி அமைச்சராக இருந்த போது ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்தியவர் இவரே. 66 வயதான அருண் ஜெட்லி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசிலும், நரேந்திர மோடி அரசிலும் அமைச்சராக இருந்தவர். வாஜ்பாய் ஆட்சியில் தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராக பதவி வகித்துள்ளார். பா.ஜ.க.வின் குழுத் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார். நிதித்துறை, பாதுகாப்புத்துறை, சட்டத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். இவர் உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.

வாழ்க்கை வரலாறு

டெல்லியில் கல்லூரி மாணவராக இருந்த போது அரசியலில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டவர் இவர்.  1975 -77ல் நாட்டில் அவரச நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது அருண் ஜெட்லி கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையில் இருந்தார். 2009 - 2014-ம் ஆண்டுகள் வரை மாநிலங்களைவை எதிர்க்கட்சித் தலைவராக அருண் ஜெட்லி இருந்தார். தீவிர கிரிக்கெட் ரசிகரான இவர் டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராகவும் பதவி வகித்தவர்.

இருபெரும் தலைவர்கள் ..

இவரது மறைவு குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அருண் ஜெட்லியின் துயரமான மறைவை ஆழ்ந்த இரங்கலுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது. மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, தனது உடல் நலக்குறைவு காரணமாக நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதே போல வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜூம் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை. இருவருமே நரேந்திர மோடியின் 2-வது அரசில் அமைச்சர்களாக பதவி வகிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. சில தினங்களுக்கு முன்புதான் சுஷ்மா ஸ்வராஜ் காலமானார். அவரது மறைவால் பாரதீய ஜனதா கட்சி பெரும் அதிர்ச்சியை சந்தித்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் பாரதீய ஜனதா கட்சிக்கு தற்போது மற்றும் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி ஆகிய இரு பெரும் தலைவர்களின் அடுத்தடுத்த மறைவு பாரதீய ஜனதா கட்சிக்கு மிகப் பெரும் இழப்பாகவே கருதப்படுகிறது.

பிரதமர் வேதனை

மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜெட்லி கடந்த ஆண்டு மே மாதம் 14-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு அவரால் தனது பணியை கவனிக்க முடியவில்லை. இதையடுத்து ரயில்வே அமைச்சராக இருந்த பியூஷ் கோயல் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி இது குறித்து கூறுகையில், விலைமதிப்பற்ற ஒரு நண்பரை இழந்து விட்டேன் என்று வேதனையோடு கூறியுள்ளார். இதே போல் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், நிதின் கட்காரி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் அருண்ஜெட்லியின் மறைவால் தங்களது வேதனையை வெளிப்படுத்தி உள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர்களும் கூட தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். அருண் ஜெட்லிக்கு சங்கீதா என்ற மனைவியும், ரோஹன் என்ற மகனும், சோனாலி என்ற மகளும் உள்ளனர். அருண் ஜெட்லி மறைவு குறித்து கேள்விப்பட்ட பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜெட்லி குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார். மத்திய அமைச்சரவையில் ஒரு மிகப் பெரும் திறமைசாலியாக கருதப்பட்டவர் அருண்ஜெட்லி. அவரது மறைவு பாரதீய ஜனதா கட்சிக்கு ஒரு மிகப் பெரிய இழப்பு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து