டெல்லி யமுனை நதிக்கரை அருகே அருண் ஜெட்லியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் - துணை ஜனாதிபதி - ஓ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி

ஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019      இந்தியா
OPS tribute to Arun Jetley 2019 08 25

புது டெல்லி : மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் அரசு மரியாதையுடன் டெல்லி யமுனை நதிக் கரையை ஒட்டியுள்ள நிகாம்பாத் காட் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, ஜெயகுமார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். 

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி. மூச்சுத் திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு பலதுறை மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அவரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்கள் உட்பட பல தலைவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று பார்த்தனர்.

இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் மதியம் 12.07 மணியளவில் காலமானதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, பா.ஜ.க. தலைவர்கள், அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் மருத்துவமனை விரைந்தனர். பின்னர் அருண் ஜெட்லியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர், எம்பார்மிங் செய்யப்பட்டு நேற்று முன்தினம் மாலை டெல்லி கைலாஷ் காலனியில் இருக்கும் அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ஜெட்லியின் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா, பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட பல்வேறு தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, ஜெயகுமார் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் ஜெட்லியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்,

அதனை தொடர்ந்து மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் பொதுமக்கள் பார்வைக்காக டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அங்கு பா.ஜ.க. உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அருண் ஜெட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின் அங்கிருந்து இறுதி சடங்குக்காக நிகாபோத் காட் பகுதிக்கு அருண் ஜெட்லி உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து யமுனை நதிக் கரையை ஒட்டியுள்ள நிகாம்பாத் காட் மயானத்திற்கு ஜெட்லியின்  உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முழு அரசு மரியாதையுடன், இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் உடல் தகனம் செய்யப்பட்டது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து