முடிவுக்கு வருகிறது சி.பி.ஐ. காவல்: ப. சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

ஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019      இந்தியா
P Chidambaram 2019 08 21

புது டெல்லி : முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட 5 சி.பி.ஐ காவல் இன்றுடன் முடிவடைவதால் அவருக்கு முன்ஜாமீன் கிடைக்குமா? என்பது இன்று தெரிந்து விடும்.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து ப.சிதம்பரத்தை கடந்த 21-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்து சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர். மறுநாள் சி.பி.ஐ. தனி கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சி.பி.ஐ. மனுதாக்கல் செய்தது. இதையடுத்து சிதம்பரத்தை வருகிற 26-ம் தேதி (இன்று) வரை 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.

இதையடுத்து ப.சிதம்பரத்தை அதிகாரிகள் சி.பி.ஐ. அலுவலகத்திற்கு மீண்டும் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அவரிடம் நிதி முறைகேடு தொடர்பாக பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டனர். இதற்கு அவர் சரியான பதில்கள் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ப.சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட 5 நாள் சி.பி.ஐ காவல் இன்றுடன் முடிவடைகிறது. அதன்பின் அவரை அதிகாரிகள் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி காவலை மேலும் நீட்டிக்க  வேண்டுகோள் விடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லி கோர்ட்டில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் உடனே அவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த  மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் ஜாமீன் அப்பீல் மனு விசாரணையை 26-ம் தேதிக்கு(இன்று) ஒத்திவைத்தனர். இதையடுத்து ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடக்கிறது. இதில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டால் அவர் சிறையில் அடைக்கப்படுவது உறுதியாகி விடும்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து