முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குறிக்கோளில் வெற்றி பெறும் வரை கவனத்தை திசை திருப்பக் கூடாது: தேனி எம்.பி. ரவீந்திரநாத்குமார் அறிவுரை

ஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019      தேனி
Image Unavailable

போடி, -    குறிக்கோளில் வெற்றி பெறும் வரை கவனத்தை திசை திருப்பக் கூடாது என போடியில் நடைபெற்ற அரசு பணியாளர் தேர்வு எழுதுவோருக்கான இலவச பயிற்சி வகுப்பு நிறைவு நிகழ்ச்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் அறிவுரை வழங்கினார்.
     தமிழக துணை முதல்வரும், போடி சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் ஏற்பாட்டின்பேரில், ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி அறக்கட்டளை, திண்ணை மனிதவள மேம்பாட்டுக் கழகம் இணைந்து போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. பயி்ற்சி வகுப்பை ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்த நிலையில், பயிற்சி வகுப்பு நிறைவு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
      ஸ்ரீகுருதட்சிணாமூர்த்தி அறக்கட்டளை கௌரவ தலைவர் சரவணன் தலைமை வகித்தார். தேனி திண்ணை மனிதவள மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் செந்தில் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், மாதிரி தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசுகளும், பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அனைவருக்கும் பயிற்சி கையேடுகளும் வழங்கி வாழ்த்தி பேசிய தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் பேசும்போது,
     இந்த இலவச பயிற்சி வகுப்பு தொடங்கும்போது பாராளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்றிருந்தேன். இருப்பினும் பயிற்சி வகுப்பு குறித்து அவ்வப்போது விசாரித்து தெரிந்து கொண்டேன். இன்று பயிற்சி வகுப்பு நிறைவு பெறுகிறது. பயிற்சி வகுப்பு நிறைவு பெற்றுவிட்டதே என நினைத்து வீட்டிற்கு சென்றதும் வீட்டு பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கவனத்தை திசை திருப்பி வீடாதீர்கள். உங்கள் நோக்கம் அரசு பணியாளர் தேர்வில் வெற்றி பெறுவது. எனவே குறிக்கோளில் வெற்றி பெறும் வரை கவனத்தை திசை திருப்பாமல் உழைக்க வேண்டும்.
     தேனி பாராளுமன்ற தொகுதியை இந்தியாவிலேயே முன்னோடியான தொகுதியாக மாற்றுவதற்காக தேனி பாராளுமன்ற தொகுதி வளர்ச்சிக் குழு அமைக்கப்பட்டு அதன் கீழ் நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி வாரியாக துணைக்குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த குழுவின் மூலம் தொலை நோக்கு பார்வையுடன் பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது. இதில் தன்னார்வமுள்ள அனைவரும் உறுப்பினராக பங்கேற்று தொகுதி வளர்ச்சிக்கு கருத்துக்களை தெரிவிக்கலாம்.
     இதற்காக தனியாக இணையதளம் மற்றும் கைபேசி செயலி உருவாக்கப்படும். அதன் மூலம் மக்கள் பிரச்சனைகளை யார்வேண்டுமாலும் புகைப்படம் மூலம் பதிவேற்றம் செய்தால் அது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு பிரச்சனைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும். இதனை நாம் அனைவரும் சேர்ந்து கூட்டு இயக்கமாக செயல்படுத்துவோம் நமது பகுதி வளர்ச்சிக்கு உதவிடுவோம் என்றார்.
     நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வரின் முதுநிலை நேர்முக உதவியாளர் கண்ணன்,  போடி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக  நேர்முக உதவியாளர் ராஜா அழகணன், அ.தி.மு.க. போடி நகர செயலாளர் பழனிராஜ், சின்னமனூர் நகர செயலாளர் விமலேஸ்வரன் , ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ராமசுப்பிரமணி மற்றும் அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து