முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை வெளிநாடு பயணம் - அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார்

திங்கட்கிழமை, 26 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தொழில்முனைவோரை சந்தித்து முதலீடுகளை ஈர்ப்பதற்காக நாளை 28-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு செல்கிறார். மொத்தம் 12 நாட்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் உள்ளிட்ட நாடுகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

"தொழில் துறையில் மாநிலம் முன்னேற்றம் அடைய வேண்டும் எனில், அந்த மாநிலத்தில் உள்ள தொழில் முனைவோர் மட்டும் அல்லாமல், பிற மாநிலங்களைச் சார்ந்தவர்களும், பிற நாட்டினரும் விரும்பி வந்து தொழில் தொடங்கும் இடமாக அந்த மாநிலம் அமைய வேண்டும்" என்றார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.

அவரது கொள்கைகளை நிறைவேற்றும் விதத்திலும், அவரது லட்சியங்களை அடையும் வகையிலும் அரசு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், சுகாதாரம் தொடர்பான பல்வேறு முன்னேற்றங்களையும், தொழில்நுட்பங்களையும் வெளிநாடுகளிலிருந்து அறிந்து கொண்டு தமிழ்நாட்டில் செயல்படுத்திடவும், வெளிநாடுவாழ் தமிழர்கள் மற்றும் பிற முதலீட்டாளர்களிடமிருந்து முதலீடுகளைப் பெற்று தமிழ்நாட்டை மேலும் வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்லவும் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

லண்டன் நிகழ்ச்சிகள்

நாளை 28-ம் தேதி காலை சென்னையில் இருந்து புறப்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி லண்டன் சென்றடைகிறார். அங்கு, மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணித் தரத்தின் மேம்பாடுகளைக் கண்டறிந்து, அதனை நமது மாநிலத்தில் செயல்படுத்தும் வகையில் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தினரைச் சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சியிலும், இங்கிலாந்தில் செயல்படுத்தப்படும் அவசர ஆம்புலன்ஸ் சேவையை பார்வையிட்டும், மலேரியா போன்ற தொற்று நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மற்றும் மேற்படி நோய்களை கையாளும் வழிமுறைகளை அறிந்து, தமிழ்நாட்டில் அந்நோய்களை கட்டுப்படுத்த அந்நிறுவனத்துடன் ஓர் நோக்க அறிக்கை கையெழுத்திடும் நிகழ்ச்சியிலும், லண்டன் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனை தமிழ்நாட்டில் தனது கிளைகளை நிறுவ அம்மருத்துவமனையுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியிலும், லண்டனில் இந்துஜா உள்ளிட்ட அங்குள்ள பல தொழில் முதலீட்டாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சியிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.

மேலும், சஃபோல்க் நகரில் உள்ள ஐ.பி.ஸ்விட்ச் - ஸ்மார்ட் கிரிட் நிறுவனத்தில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் சூரியசக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை மின் கட்டமைப்பில் எளிய முறையில் சேர்த்திடும் வழிமுறைகள் மற்றும் அதைச் சார்ந்த தொழில்நுட்பத்தை அறிந்து கொண்டு, நமது மாநிலத்தில் அதைச் செயலாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய, அந்நிறுவனத்தை பார்வையிட உள்ளார். இது தவிர, இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க உள்ளார்.

அமெரிக்காவில்...

செப்டம்பர் 1-ம் தேதி இரவு இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு செப்டம்பர் 2-ம் தேதி நியூயார்க் சென்றடையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க தொழில் முனைவோர் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்து, அமெரிக்கவாழ் தமிழ் மக்களிடம் கலந்துரையாட உள்ளார்கள். பின்னர் அங்கிருந்து சான் ஹூசெ சென்று, அங்குள்ள அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க தொழில் முனைவோர் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்திக்க உள்ளார்.

நியூயார்க்கைச் சார்ந்த தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை நடத்திவரும் கேட்டர்பில்லர் மற்றும் ஃபோர்டு நிறுவனங்களின் உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தகவல் தொழில்நுட்பத்தில் பெயர் பெற்ற சான் பிரான்சிஸ்கோ நகரில் ஃபாக்ஸ்கான் மற்றும் லிங்கன் எலெக்ட்ரிக் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களையும் சந்தித்து உரையாற்ற இருக்கிறார்.

இது தவிர, சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்பட உள்ள உலகத்தரம் வாய்ந்த கால்நடைப் பூங்காவிற்கு தேவைப்படும் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள பஃபல்லோ மற்றும் கலிபோர்னியாவில் உள்ள கால்நடை பண்ணைகளை பார்வையிட உள்ளார். மேலும், புதுப்பிக்கத் தக்க எரிசக்தியை ஏற்கனவே உள்ள மின்கட்டமைப்பில் எளிய முறையில் சேர்ப்பது தொடர்பான வழிமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் வகையில், சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள ப்ளூம் எனர்ஜி நிறுவனத்தையும் பார்வையிடுகிறார்.

துபாயில் எடப்பாடி...

7-ம் தேதி அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பும் வழியில், 8 மற்றும் 9 ஆகிய நாட்களில் துபாயில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஐக்கிய அரபு அமீரக அரசின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறையின் கீழ் இயங்கும் பிஸினஸ் லீடர்ஸ் போரம் என்ற அமைப்பும், இந்திய துணைத் தூதரகமும் இணைந்து நடத்தும் துபாய் தொழில் முனைவோர் ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு சிறப்பு விருந்தினர் என்ற முறையில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். பின்னர் துபாயில் உள்ள தொழில் முனைவோர்களிடம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கும் வகையில் தனியே ஒரு கூட்டம் நடத்திவிட்டு, செப்டம்பர் 10-ம் தேதி முதல்வர் எட்பபாடி பழனிசாமி தமிழ்நாடு திரும்புகிறார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து