முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய மின்சார பஸ்களை முதல்வர் எடப்பாடி கொடியசைத்து துவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 26 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் மின்சார பஸ்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கொடியசைத்து அறிமுகம் செய்து வைத்தார்.

போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் நிதி நெருக்கடியை குறைக்கவும், பெட்ரோல் -டீசல் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டும், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் நோக்கத்திலும் மின்சார பஸ்களை இயக்க தமிழக அரசு முடிவு செய்தது.

அசோக் லேலண்ட் நிறுவனத்தினர் 2 மின்சார பஸ்களை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு தயாரித்து கொடுத்துள்ளனர். நேற்று தலைமை செயலகத்தில் இந்த மின்சார பஸ்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர்கள் பஸ்சில் அமர்ந்து பயணம் செய்தனர்.மின்சார பஸ்களுக்கு பல்லவன் இல்லத்தில் ரீசார்ஜ் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. 4 மணி நேரம் ரீசார்ஜ் செய்தால் 320 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம்.இன்னும் சில மாதங்களில் மேலும் 100 மின்சார பஸ்களை சென்னையில் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பஸ்சில் உள்ள வசதிகள்

மின்சார பஸ் பரிசோதனை அடிப்படையில் நாள்தோறும் டாக்டர் எம்.ஜி.ஆர். மத்திய ரெயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து ஏ–1 வழித்தடமான மயிலாப்பூர், அடையாறு வழியாக திருவான்மியூர் வரை காலை 2 நடையும், மாலை 2 நடையும் இயக்கப்படும். முழுமையாக குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள இந்த பஸ்சில் தானியங்கி கதவுகளும், வழித்தடங்களை அறியக்கூடிய ஜி.பி.எஸ். கருவி வசதியும் உள்ளது. 32 இருக்கைகள் வசதிகள் கொண்ட இந்த பேருந்து இந்திய போக்குவரத்து தரக்கட்டுப்பாடு அமைப்பினால் தகுதி சான்று அளிக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்சில் மின்கலம் இருப்பு நிலை மற்றும் வெப்ப நிலை, ஓட்டுனரின் செயல்பாடு, பஸ்சின் செயல்பாடு, பஸ்சில் ஏற்படும் மின் கசிவினை கண்டறிந்து அதை தானாக செயலிழக்க வைத்தல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ரிமோட்டில் கண்காணிக்கக் கூடிய ‘அலர்ட் சிஸ்டம்’ என்ற நவீன தொழில்நுட்ப அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து