முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஜோகோவிச், பெடரர், செரீனா வெற்றி

செவ்வாய்க்கிழமை, 27 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Image Unavailable

நியூயார்க் : அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் ஜோகோவிச், பெடரர், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது.நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான ஜோகோவிச் (செர்பியா) முதல் சுற்றில் ஸ்பெயினை சேர்ந்த ராபர்ட்டோ கார்பெலிசை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-4, 6-1, 6-4 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் 23-வது வரிசையில் இருக்கும் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) தகுதி சுற்று வீரரான ஜானிக் சீன்னரை (இத்தாலி) 6-3, 7-6 (7-4), 4-6, 6-3 என்ற கணக்கில் வென்றார். உலகின் 3-ம் நிலை வீரரும், 20 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து)- இந்திய வீரர் சுமித் நாசலை எதிர்கொண்டார். தகுதி சுற்றில் வென்று முதன்மை சுற்றுக்கு முன்னேறிய சுமித் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வென்று பெடரருக்கும் யாருமே எதிர்பாராத வகையில் அதிர்ச்சி கொடுத்தார்.

ஆனால் அதற்கு அடுத்த செட்களில் பெடரர் பிரமாதமாக விளையாடி சுமித் நாசலை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஸ்கோர் 4-6, 6-1, 6-2, 6-4.மற்ற ஆட்டங்களில் 5-வது வரிசையில் இருக்கும் மெட்சதேவ் (ரஷியா) 7-வது வரிசையில் இருக்கும் நிஷிகோரி ஆகியோரும் வென்றனர். சென்னையை சேர்ந்த குன்னேஸ்வரன் முதல் சுற்றிலேயே மெட்வதேவிடம் தோற்று வெளியேறினார். 23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரும், உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருப்பவருமான செரீனா வில்லயம்ஸ் (அமெரிக்கா) தொடக்க சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான மரியா ‌ஷரபோவாவை (ரஷியா) எதிர்கொண்டார். இதில் செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-1 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 2-வது இடத்தில் இருப்பவரான ஆஸ்லே பேர்டி (ஆஸ்திரேலியா) முதல் சுற்றில் 1-6, 6-3, 6-2 என்ற கணக்கில் ஜரினா டியாசை (கஜகஸ்தான்) வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் 3-ம் நிலை வீராங்கனையான பிளிஸ்கோவா (செக் குடியரசு), வீனஸ் வில்லியம்ஸ், மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா), 5-வது வரிசையில் உள்ள சுவிட்டோலினா (உக்ரைன்) ஆகியோர் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து