முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் மக்களுக்கு ஆதார் பதிவை துரிதப்படுத்த மத்திய அரசு முடிவு

செவ்வாய்க்கிழமை, 27 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ஜம்மு -காஷ்மீரில் பொதுமக்களுக்கு ஆதார் பதிவை துரிதப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் ஜம்மு - காஷ்மீர் இந்தியாவுடன் முழுமையாக இணைக்கப்பட்டு, மற்ற மாநிலங்களை போலவே மத்திய அரசின் திட்டங்களை நேரடியாக செயல்படுத்த வழிவகை செய்யப்பட்டது. எனவே அரசு வழங்கும் சலுகைகள், மானியங்கள், நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் எண் தேவை என்பதால், அம்மாநில மக்கள் அனைவருக்கும் ஆதார் பதிவை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் தற்போதைய நிலவரப்படி 78 விழுக்காடு மக்கள் ஆதார் பதிவு பெற்றிருந்தாலும், சில பகுதிகளில் குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் மிகக்குறைந்த அளவிலான மக்களே ஆதார் பதிவு பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

அவர்களை மையமாக வைத்தே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜம்மு - காஷ்மீர் முழுவதும் அடுத்த ஒரு வாரத்திற்குள் அதிகளவிலான பொது சேவை மையங்களை திறக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் பணிகள் அக்டோபர் 31-ம் தேதியுடன் நிறைவடைந்த பின்னர், ஆதார் பதிவை துரிதப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு கடந்த 5-ம் தேதி காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்தது. இதையொட்டி முன்னெச்சரிக்கையாக செல்போன் சேவை மற்றும் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு உள்பட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. நிலைமை ஓரளவு சீரடைந்ததை தொடர்ந்து தொலைபேசி சேவை சில இடங்களுக்கு மீண்டும் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 25-ம் தேதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். ஸ்ரீநகரில் மட்டும் சில இடங்களில் கம்பி வேலிகள் சாலையில் வைக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை சோதனை செய்யப்பட்ட பின்னர் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். போக்குவரத்து அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து