முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கப்பலூர் டோல்கேட்டில் கட்டணம் செலுத்த மறுத்து துப்பாக்கியால் சுட்டு தகராறு 4 துப்பாக்கிகள் 15 தோட்டாக்கள் பறிமுதல்:

வியாழக்கிழமை, 29 ஆகஸ்ட் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் டோல்கேட்டில் கட்டணம் செலுத்த மறுத்ததுடன் துப்பாக்கியால் சுட்டு தகராறு செய்த வாலிபரை டோல்கேட் ஊழியர்கள் உதவியுடன் ஹைவே பேட்ரோல் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.மேலும் காரில் தப்பியோடிய நண்பர்கள் 5 பேரும் வாலாந்தூர் பகுதியில் போலீசாரிடம் சிக்கினார்கள்.இவர்களிடமிருந்து 4 துப்பாக்கிகள் மற்றும் 15 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த தனசேகரன்(37) என்பவர் நெல்லை பெருமாள்புரம் பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு தனது நண்பர்களான திருச்சி அரியாமங்கலம் சசிகுமார்(25),மதுரை ரகுபதி(39) சென்னையைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன்(33),கார்த்திகேயன்(38) மற்றும் வேலூரைச் சேர்ந்த ராஜா(34) ஆகிய 6 பேருடன் காரில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.நேற்று மதியம் கப்பலூர் டோல்கேட்டிற்கு இவரது கார் வந்த போது அங்கிருந்த ஊழியர்கள் சுங்க கட்டணம் செலுத்திடுமாறு கேட்டுள்ளனர்.அதற்கு சசிகுமார் மற்றும் அவருடன் வந்த நண்பர்கள் 5 பேரும் டோல்கேட்டில் நீண்ட வரிசையில் கார் நின்றதால் காலதாமதம் ஏற்பட்டதால் சுங்க கட்டணம் செலுத்திட முடியாது என்று வாக்குவாதம் செய்துள்ளனர்.இதனால் அதிர்ச்சியடைந்த டோல்கேட் ஊழியர்கள் காரை பேரிகார்டு போட்டு தடுத்து நிறுத்திவிட்டனர்.இதனால் ஆத்திரமடைந்த சசிகுமார் டோல்கேட் ஊழியர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார்.இதனை பயன்படுத்தி காரில் வந்த தனசேகரன் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேரும் காரை கிளப்பி சென்றுள்ளனர்.
இந்த சமயத்தில் சசிகுமார் ஓடிச் சென்று காரில் ஏற முயற்சித்திடும் போது டோல்கேட் ஊழியர்கள் அவரை சுற்றி வளைத்துள்ளனர்.இதனை தொடர்ந்து சசிகுமார் தனது இடுப்பில் சொருகி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டுள்ளார்.இதனை கண்ட டோல்கேட் ஊழியர்கள் அங்கிருந்து தப்பியோடி பதுங்கியுள்ளனர்.மேலும் அங்கே பாதுகாப்பிற்கு நின்றிருந்த ஹைவே பேட்ரோல் போலீசாரிடம் டோல்கேட் ஊழியர்கள் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தகவல் கொடுத்தனர்.இந்நிலையில் தான் வைத்திருந்த துப்பாக்கியில் தோட்டாக்கள் சிக்கிக் கொண்டதை அறிந்த சசிகுமார் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.இதனை கண்ட போலீஸ்காரர் சுரேஷ் மற்றும் ஹைவே பேட்ரோல் போலீசார் டோல்கேட் ஊழியர்கள் உதவியுடன் விடாமல் விரட்டிச் சென்று கப்பலூர் கிராமத்திற்குள் நுழைந்து காலில் காயமடைந்து விழுந்து கிடந்த சசிகுமாரை அதிரடியாக கைது செய்ததுடன் அவரிடமிருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
போலீசாரிடம் சிக்கிய சசிகுமார் பலத்த பாதுகாப்புடன் ஜீப்பில் ஏற்றி உடனடியாக திருமங்கலம் நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.இதனிடையே போலி நம்பர் பிளேட்; பொருத்தப்பட்ட காரில் தப்பிச் சென்ற சசிகுமாரின் நண்பர்கள் 5 பேரும் வாலாந்தூர் பகுதியில் ஆட்டோவில் சென்றபோது போலீசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.அவர்களிடமிருந்து 3துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் வைத்து சசிகுமாரிடமும் அவரது நண்பர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் சசிகுமார் பயன்படுத்தி துப்பாக்கி நவீன ரகத்தை சேர்ந்தது என்பதால் அதனை எங்கிருந்து வாங்கியிருப்பார் என்பது குறித்தும் போலீசார் புலனாய்வு செய்து வருகின்றனர்.கைதான 6பேரும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.இதனிடையே துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற கப்பலூர் டோல்கேட் மற்றும் திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் மதுரை மாவட்ட எஸ்.பி.,மணிவண்ணன்,திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர்; முருகேசன் மற்றும் கியூ பரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.கப்பலூர் டோல்கேட்டில் கட்டணம் செலுத்த மறுத்து துப்பாக்கியால் சுட்டு தகராறு செய்த வாலிபர் மற்றும் அவரது நண்பர்கள் 4துப்பாக்கிகளுடன் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் திருமங்கலம் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து