முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: தொடரை வெல்லுமா இந்தியா ?

வியாழக்கிழமை, 29 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Image Unavailable

டீம் இந்தியா : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் ஜமைக்காவில் இன்று தொடங்குகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் இந்திய அணி ஏற்கனவே கைப்பற்றி இருந்தது. 2 டெஸ்ட் போட்டித் தொடரில் ஆண்டிகுவாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 318 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருந்தது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டன் சபீனா பார்க் மைதானத்தில் இன்று (30-ந்தேதி) தொடங்குகிறது. முதல் டெஸ்டை போலவே இந்த டெஸ்டிலும் இந்தியாவின் அதிரடி நீடிக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெஸ்டில் டிரா செய்தாலே தொடரை வென்று விடும். 2-வது டெஸ்டிலும் வென்று 2-0 என்ற கணக்கில் தொடரை வெல்லும் ஆர்வத்தில் இந்தியா உள்ளது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய அணி சம பலத்துடன் இருக்கிறது. ரகானேயின் பேட்டிங்கும், பும்ராவின் பந்துவீச்சும் முதல் டெஸ்டில் முத்திரை பதிக்கும் வகையில் இருந்தது. ஆண்டிகுவா டெஸ்டில் ரகானே இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 183 ரன்களை எடுத்தார். இதில் சதமும், அரை சதமும் அடங்கும். இதே போல் விகாரி (125 ரன்), லோகேஷ் ராகுல், கேப்டன் விராட் கோலி ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். தொடக்க வீரர் அகர்வால் சிறப்பாக ஆட வேண்டிய நிலையில் உள்ளார்.

பந்து வீச்சில் இஷாந்த் சர்மா (8 விக்கெட்), பும்ரா (6 விக்கெட்), முகமது‌ ஷமி (4 விக்கெட்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். முதல் இன்னிங்சில் இஷாந்த் சர்மாவும், 2-வது இன்னிங்சில் பும்ராவும் 5 விக்கெட் வீழ்த்தி சாதித்தனர். முன்னணி சுழற்பந்து வீரர் அஸ்வின் முதல் டெஸ்டில் நீக்கப்பட்டது அதிர்ச்சியானதே.  2-வது டெஸ்டிலாவது அவர் இடம் பெறுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றி அணி என்று கருதினால் மாற்றம் இருக்காது. மேலும் ஜடேஜா ஆல்ரவுண்டர் பணியில் சிறப்பாக செயல்பட்டார். முதல் இன்னிங்சில் அரை சதம் அடித்து இருந்தார். ஆனால் 2 விக்கெட் மட்டுமே கைப்பற்றி இருந்தார். 20 ஓவர், ஒருநாள் தொடரை இழந்த வெஸ்ட்இண்டீஸ் டெஸ்ட் தொடரை இழக்காமல் இருக்க இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து டெஸ்ட் தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயம் வெஸ்ட் இண்டீஸ்க்கு உள்ளது. அந்த அணியின் பேட்டிங் மிகவும் சொதப்பலாக இருந்தது. 318 ரன்னில் மோசமாக தோற்றதே இதற்கு உதாரணமாகும். அந்த அணி 2-வது இன்னிங்சில் 100 ரன்னில் சுருண்டு இருந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இந்த டெஸ்டில் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். பந்து வீச்சில் ராஸ்டன் சேஸ், கேமர் ரோச் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இரு அணிகளும் இன்று மோதுவது 98-வது டெஸ்ட். இதுவரை நடந்த 97 போட்டியில் இந்தியா 21-ல், வெஸ்ட்இண்டீஸ் 30-ல் வெற்றி பெற்றுள்ளன. 46 டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இன்றைய டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. சோனி டென் டெலிவி‌ஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து