டோரியன் புயலுக்கு 5 பேர் பலி - அமெரிக்க மக்கள் வெளியேற்றம்

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2019      உலகம்
Dorian storm 2019 09 03

 லூசி : டோரியன் புயலுக்கு 5 பேர் பலியான நிலையில், அமெரிக்காவின் லட்சக்கணக்கான கிழக்கு கடலோர மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

கரீபியன் தீவுக்கு அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு சக்தி வாய்ந்த புயல் உருவானது. இந்த புயலுக்கு ‘டோரியன்’ என பெயரிடப்பட்டது.

‘டோரியன்’ புயலானது அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான பஹாமசை திங்கட்கிழமை தாக்கும் என்று அமெரிக்க தேசிய புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து பஹாமஸ் தீவுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. காற்றின் வேகம் மற்றும் மழை வெள்ளத்தில் வீடுகள் அடித்து செல்லாமல் இருக்க மணல் மூட்டைகளை மக்கள் அடுக்கி வைத்தனர்.

இந்த நிலையில் 5-ம் நிலை புயலாக அறிவிக்கப்பட்டிருந்த ‘டோரியன்’ புயல்   வடக்கு பஹாமஸ் அருகே அபாகோ தீவில் உள்ள எல்போகே என்ற பகுதியில் கரையை கடந்தது. அதனை தொடர்ந்து நேற்று காலை பஹாமஸ் தீவுகளை ‘டோரியன்’ புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. புயலின் வேகம் காரணமாக சாலைகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. வீடுகளில் இருந்த மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு அலைகள் ஆக்ரோஷமாக கரையில் மோதின. புயலை தொடர்ந்து கனமழை கொட்டித்தீர்த்தது.  

இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பஹாமசில் பல்வேறு பகுதிகளில் மின்இணைப்பு மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘டோரியன்’ புயல் காரணமாக பஹாமசில் பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்பட்டிருக்கும் என நம்பப்படுகிறது. இந்த புயலுக்கு 5 பேர் பலியாகி உள்ளனர். பஹாமசின் பிரதமர் ஹூபெர்ட் மின்னிஸ், இந்த புயல் வரலாற்று சோகம் என குறிப்பிட்டு  உள்ளார். புயல் அமெரிக்காவை நோக்கி செல்லும் நிலையில், அங்குள்ள கிழக்கு கடலோர பகுதிவாழ் மக்கள் லட்சக்கணக்கானோர் முன்னெச்சரிக்கையாக வேறிடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து