இதுவரை இல்லாத அளவுக்கு வெறுப்புணர்வைத் தூண்டும் வகையான வீடியோக்களை நீக்கியுள்ளதாக யூ டியூப் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒரு பக்கம் தொழில்நுட்பம் விண்ணைத் தொடும் அளவுக்கு வளர வளர இன்னொரு பக்கம் ஆபத்துகளும் குற்றச்செயல்களும் வளர்ந்து கொண்டிருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருந்தாலும் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான கருத்துகளும் அன்றாடம் சமூக வலைதளங்களில் பரவி வருவதையும் காண முடிகிறது. உலகின் முன்னணி வீடியோ தளமான யூ டியூப், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையில் இதுவரை இல்லாத அளவு 5 மடங்கு அதிக எண்ணிக்கையிலான வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகள் அடங்கிய வீடியோக்களை நீக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மதம், சாதி, பாலினம், நிறம் ஆகியவற்றுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான ஒரு லட்சம் வீடியோக்களையும், 17 ஆயிரம் சேனல்களையும், 500 மில்லியன் கமெண்ட்களையும் யூ டியூப்பிலிருந்து நீக்கியுள்ளோம். இது கடந்த முறையை விட 5 மடங்கு அதிக எண்ணிக்கையாகும். திறந்த மனப்பான்மை என்பது எளிதானது அல்ல. இது சில நேரங்களில் சர்ச்சையாகவோ அல்லது மனம் புண்படும்படியாகவோ அமைந்து விடும். ஆனால், பலதரப்பட்ட கருத்துகளைக் கேட்பதுதான் நம்மை வலிமையான சமூகமாக உருவாக்கும் என்று நம்புகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.