முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெக்சிட் விவகாரம்: ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் பிரிட்டன் அரசின் முயற்சி தோல்வி

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : பிரெக்சிட் விவகாரத்தில், ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் முயற்சியை பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் தோற்கடித்தனர்.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து ஒப்புதலை பெற பலமுறை ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதில் அப்போதைய பிரதமர் தெரசா மே அரசு தோல்வியடைந்தது. இதையடுத்து தெரசா மே கடந்த மாதம் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.  அதன்பின், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார். அவர் அக்டோபர் 31-ம் தேதிக்குள் பிரெக்சிட் மசோதாவை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இல்லையெனில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் முடிவை எடுக்க வேண்டும். ஆனால், அக்டோபர் 31-ம் தேதிக்குள் ஒப்பந்தம் மேற்கொண்டோ அல்லது ஒப்பந்தம் இல்லாமலோ விலக உள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார். இதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டது.

இதற்கிடையே, போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பிராக்னல் எம்.பி. பிலிப் லீ, லிபரல் டெமாகிரட்ஸ் கட்சியில் இணைந்தார். இதனால், பாராளுமன்றத்தில் போரிஸ் ஜான்சன் தனது பெரும்பான்மையை இழந்தார். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பிரெக்சிட் விவகாரத்தில் நேற்று முன்தினம் முக்கியத்துவம் வாய்ந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. அதாவது, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதை மேலும் தாமதப்படுத்தக் கோரும் மசோதா தொடர்பாக பாராளுமன்ற பொது அவையில் விவாதிக்கப்பட்டது. விவாதத்திற்குப் பின்னர் இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், மசோதாவுக்கு ஆதரவாக 327 வாக்குகளும், எதிராக 299 வாக்குகளும் கிடைத்தன. இதன்மூலம், ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுவதற்கு பிரிட்டன் அரசு எடுத்த முயற்சியை, சமீபத்தில் நீக்கப்பட்ட கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்கள் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இணைந்து முதல் கட்டத்தில் தோற்கடித்தனர். இந்த மசோதாவிற்கு மேல்சபையும் ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, பிரெக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற பிரதமர் போரிஸ் ஜான்சன் மேலும் 3 மாத கால அவகாசம் கேட்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதே போல் பாராளுமன்றத்தை கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் கோரிக்கை விடுத்தார். இதற்கு எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து அவரது கோரிக்கையை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து