முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கா சான் ஹூசே நகரில் முதலீட்டாளர்கள் கூட்டம்: தமிழகத்திற்கு மேலும் ரூ. 2300 கோடி தொழில் முதலீடு செய்ய ஒப்பந்தம் - முதல்வர் எடப்பாடி முன்னிலையில் 19 நிறுவனங்கள் கையெழுத்து

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : அமெரிக்காவின் சான் ஹூசே நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 19  தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, சுமார் 2,300 கோடி  ரூபாய் முதலீடு தமிழ்நாட்டிற்கு குவிந்தது. இதன் மூலம் 6,500-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு புதிய  வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

அமெரிக்க நாட்டிலுள்ள தொழில் முனைவோரிடம் இருந்தும், அமெரிக்க வாழ் தமிழ்  முதலீட்டாளர்களிடம் இருந்தும், முதலீடுகளைப் பெற்று தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து  எடுத்துச் செல்ல, அமெரிக்க நாட்டில் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நியூயார்க் நகரில் 3-ம் தேதி நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் மட்டும்  16 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இதன் மூலம், தமிழ்நாட்டில் 2,780 கோடி ரூபாய் முதலீடும், 20,000-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக அமெரிக்க நாட்டின், சான் ஹீசே நகரில்  கடந்த 4-ம் தேதியும் ஒரு முதலீட்டாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. முதல்வர்  எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் தொழில் துவங்க ஆக்கமும், ஊக்கமும்  அளிக்கப்படும் என முதல்வர் உறுதியளித்தார். இக்கூட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர். ஏற்கனவே தமிழ்நாட்டில் முதலீடு செய்து, வெற்றிகரமாக தொழில் நடத்தி வரும் அமெரிக்க  நிறுவனங்களான பாக்ஸ்கான், லின்கோலின் எலக்ட்ரிக் மற்றும் ஜோஹோ கார்ப்பரேஷனை சேர்ந்த  உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள வசதிகள் பற்றியும், தங்களின் சிறப்பான அனுபவங்களைப் பற்றியும் எடுத்துரைத்தனர்.

தமிழ்நாட்டில் உள்ள சிறந்த உட்கட்டமைப்பு, திறன் மிக்க மனிதவளம், தடையில்லா மின்சாரம், தொழில்  நடத்த உகந்த அமைதியான சூழல், விரைவான அரசு அனுமதிகள் ஆகியவற்றை விளக்கும் காட்சித்  தொகுப்பும் திரையிடப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது  உரையில்,  முதலீட்டிற்கு ஏற்ற சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்பதனை வலியுறுத்தும் விதமாக, அரசு எடுத்து வரும்  நடவடிக்கைகளையும், முதலீட்டிற்கு அளித்து வரும் ஊக்க உதவிகளையும் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும், வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களும், நிதி சார்ந்த தொழில்  நுட்ப முதலீடுகளுக்கும் (பைன் டெக்) வானூர்தி (ஏரோபேஸ்) விண்வெளி (பேஸ்) தொழில்  நுட்பங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கும், மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும்  நிறுவனங்களுக்கும் உகந்த மாநிலம் தமிழ்நாடு என்பதனை வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தைத் தொடர்ந்து, லின்கோலின், எலக்ட்ரிக், வேரபிள் மிம்ஸ், கால்டன் பயோடெக், இசட் எல்  டெக்னாலஜிஸ், காபிசாப்ட், குலோடுலேர்ன், சியரா ஹெல்த் அலடர்ஸ், ஆக்ட் குலோபல் டெக்  சொலியூன்ஸ், ரைப் ஐ.ஒ, லேடண்ட் ஏ.ஒ, நேச்சர்ஸ் மில்ஸ், சாய், ஏ.சி.எஸ் குலோபல் டெக்  சொலியூஷன்ஸ், டாட் சால்வுடு சிஸ்டம்ஸ், இன்க் ஆகிய தொழில் நிறுவனங்களும், டி.ஐ. குளோபல், யூ.எஸ்.ஐ. எஸ்.பி.எப், குலோபல் எக்ஸ், டி.சி.எப் வென்ஜசர்ஸ் ஆகிய தகவல் தொழில் நுட்ப  நிறுவனங்களும் சுமார் 2,300 கோடி ரூபாய் அளவிற்கு தமிழ்நாட்டில் முதலீடு செய்து, தொழில் துவங்க  புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டனர்.

மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் உள்ள தொழில் முனைவோருக்கு தேவையான  உதவிகள் அளிக்க டிஜிட்டல் அக்சிலேட்டர்ஸ் என்ற திட்டத்தை துவக்கி வைத்தார். அமெரிக்க தொழில்  முனைவோர் என்ற அமைப்பின் உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள இந்த டிஜிட்டல் அக்சிலேட்டர்ஸ்  திட்டத்தின் மூலம் நிதியுதவி பெறவுள்ள தமிழ்நாட்டு தொழில் முனைவோருக்கு அவர்கள் தொடங்கும்   புதுத்தொழிலுக்கு தேவையான நிதியில் 10 சதவீதத்தை தமிழ்நாடு அரசு வழங்கும் எனவும், அதற்கென 50  கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தினை தொடர்ந்து யாதும் ஊரே திட்டக் கூட்டத்தினை சான் ஹீசே  நகரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்தினார். இக்கூட்டத்தில் கலிபோர்னியா  மாகாணம் மற்றும் மேற்கு அமெரிக்க பகுதிகளைச் சேர்ந்த தமிழ் அமைப்புகள் கலந்து கொண்டன.  தமிழர்களை ஒருங்கிணைக்கும் இந்த அரிய முயற்சியான யாதும் ஊரே திட்டத்தை தமிழ் அமைப்புகள்  வெகுவாக பாராட்டின. நேற்று முன்தினம் நடத்தப்பட்ட கூட்டத்தில் மொத்தம் 19 புரிந்துணர்வு  ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, சுமார் 2,300 கோடி ரூபாய் முதலீடு தமிழ்நாட்டிற்கு  பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் 6,500-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள்  உருவாக்கப்படும். இது ஒரு அருமையான துவக்கம் மட்டுமே என்றும், வருங்காலங்களில் இம்முயற்சிகள்  மேலும், விரிவாக்கப்பட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொலை நோக்குப் பார்வையில் குறிப்பிட்டுள்ள இலக்குகள்  அனைத்தும் எட்டப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து