முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருபவர்களுக்கு ரத்தினக்கம்பளம் விரித்து வரவேற்போம் - சான்பிரான்சிஸ்கோ-வில் முதல்வர் அழைப்பு

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்க முன்வரும் வெளிநாடு வாழ் தமிழ் மக்களுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம் என்று சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில் அதிபர்களுக்கு  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார்.

கடந்த 4-ம் தேதி சான் பிரான்சிஸ்கோ-வில், வெளிநாடு வாழ் தமிழர்களின் முதலீடுகளை ஈர்க்க ஏதுவாக  "யாதும் ஊரே" என்ற திட்டத்தினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

உலகெங்கும் சென்று தமிழரின் பண்பாட்டுச் சிறப்பையும், அறிவுத் திறத்தையும் பறைசாற்றி தமிழுக்கும்,  தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்து வருகின்றீர்கள். உலகில் எந்த மூலையில் இருந்தாலும், உங்கள்  உயிராய் தமிழும், உள்ளமெல்லாம் தமிழ்நாடும் விளங்குகிறது என்பதை நான் அறிவேன். உலகின்  மாபெரும் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள்,  புத்தொழில்கள் என துறைகள்தோறும் சாதனைகள் செய்து பல நாடுகளில், புதிய தொழில் பலவற்றையும்  துவக்கி கோடிக்கணக்கான தமிழ் மக்களின் உழைப்பால் தமிழகம் உயர்ந்து விளங்குகிறது.

இந்தியாவின் சிறந்த மாநிலமாகிய தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேலும் சிறப்பிக்கும் பொருட்டு,  உலகெங்கும் வாழ்ந்து வரும் தமிழர்களின் சீரிய ஆலோசனைகளைப் பெறவும், தமிழ்நாட்டில் தொழில்  துவங்க முன்வரும் வெளிநாடு வாழ் தமிழ் மக்களுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம். உங்களைத் தேடி தமிழ்நாடு அரசு சார்பில் முதல் முறையாக பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வர் என்ற  முறையில் நான் இங்கு வருகை தந்துள்ளேன்.

உலகெங்கும் வாழும் தமிழர்களை நினைத்திட, ஒரு புதிய உறவுப்பாலம் அமைக்கும் தமிழ்நாடு அரசின்  "யாதும் ஊரே" என்ற புதிய திட்டத்தினை நியூயார்க்கில் துவக்கி வைத்தேன். தமிழ்நாடு அரசு தொழில்  துறையின் கீழ் இயங்கும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் இணையதளத்தில் "யாதும்  ஊரே" என்ற தனித் தரவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் உங்கள் முதலீடு, ஆலோசனைகள்  நேரடியாக தமிழ்நாடு அரசை வந்தடையும். நீங்கள் தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய விரும்பினால்,  அதற்கான வழிமுறைகளை எடுத்துக்கூறி, என்று சொல்லக்கூடிய ஒற்றைச் சாளர முறையில் அனைத்து  அனுமதிகளும் வழங்கப்படும். நிலையான ஆட்சி, சிறப்பான நிர்வாகம், அமைதியான சூழல், திறன்மிகு  மனித வளம், ஈடு இணையில்லா உட்கட்டமைப்பு, தடையில்லா மின் விநியோகம், இந்தியாவின்  நுழைவு வாயிலாக விளங்கும் வகையிலான பூகோள அமைப்பு என தமிழ்நாட்டின் தனித்துவத்திற்கு,  இங்கு விரும்பி வந்து தொழில் துவங்கும் பன்னாட்டு நிறுவனங்களே சான்று.

அறிவுத் திறமை, உழைப்பு இரண்டு அம்சங்களும் உள்ளவர்கள் தமிழர்கள். அந்த உழைப்பால் இன்று  உயர்ந்து. அமெரிக்காவில் நீங்கள் பணிபுரிகின்றீர்கள், புதிய, புதிய தொழில்களை ஏற்படுத்தி இன்றைக்கு  தமிழகத்திற்கு பெருமை சேர்க்கின்றீர்கள். தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும், கல்வியில் ஒரு சிறந்த  மாநிலமாக இன்று விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவிலேயே உயர்கல்வி படிப்பதிலே முதன்மையாக விளங்குகின்ற மாநிலம் தமிழ்நாடு தான். இன்றைக்கு உயர்கல்வி படிப்பவர்களின்  எண்ணிக்கை 48.6 சதவீதமாக உயர்ந்திருக்கின்றது. அதற்கு காரணம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா  இருக்கின்றபொழுது கல்வியில் புரட்சி, ஒரு மறுமலர்ச்சி ஏற்படுத்தியுள்ளார். அந்தப் புரட்சியும்  மறுமலர்ச்சியும் தான் இன்றைக்கு உயர்கல்வி படிக்கின்ற மாணாக்கர்களின் எண்ணிக்கையை உயர்த்தியிருக்கின்றது.

அது மட்டுமல்ல, தமிழகத்திலே சிறப்பான கல்வி இருக்கின்ற காரணத்திலேதான், அமெரிக்காவிலே பலர்  பல்வேறு துறைகளில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கே கிடைக்கப்பெற்ற அறிவின்,  திறமையின் காரணமாக அறிவுப்பூர்வமான கல்வியை வளர்த்ததின் காரணமாக இன்றைக்கு  வெளிநாட்டில்கூட தமிழர்களுடைய திறமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முடியாததை முடியும் என  சாதிக்கக்கூடிய திறமை படைத்தவர்கள் தமிழர்கள், அந்தச் சக்தி தமிழர்களுக்கு இருக்கின்றது. சாதிக்கப்  பிறந்தவர்கள் தமிழர்கள். அப்படி சாதிக்கப் பிறந்தவர்கள் இங்கே சாதித்துக் கொண்டிருக்கிறீர்கள்.  இதேபோல தமிழகத்திலும் நீங்கள் சாதிக்கக்கூடிய நிலையை நீங்கள் உருவாக்கித் தரவேண்டும் என்று  அன்போடு இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கின்றேன்.

தொழில் துறையைப் பொறுத்தவரை, இந்தியாவிலேயே முதல் இடத்தில் மகாராஷ்டிராவும்,  இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு இருக்கின்றது. சிறுதொழிலைப் பொறுத்தவரை, இந்தியாவிலேயே  முதலிடம் வகிப்பது தமிழ்நாடு தான். அதேபோல், சிறுதொழில் மூலமாக அதிகமான வேலைவாய்ப்பு வழங்குவதிலும் இந்தியாவிலே முதலிடம் வகிப்பது தமிழ்நாடு தான். ஆகவே, ஆயிரம் கோடி,   இரண்டாயிரம் கோடி முதலீடு செய்து பெரிய தொழில் தான் செய்ய வேண்டும் என்ற நிலை கிடையாது.  சிறிய, சிறிய தொழில்களில் முதலீடு செய்தால் கூட, அதற்கும் தமிழ்நாடு அரசு உங்களுக்கு துணை நிற்கும்  என்று இந்த நேரத்தில் அழைப்பு விடுக்கின்றேன். 

இன்றைக்கு நாங்கள் அமெரிக்காவில் வந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றபொழுது, இந்தியாவில்,  முதன்மை இடத்தில் தமிழகம் வரவேண்டும் என்று தான் நினைத்தோம். ஆனால் உங்களையெல்லாம் பார்த்து பேசியபொழுது, உலக அளவிலேயே தமிழகத்தை முதன்மை இடத்தில் கொண்டுவர முடியும் என நம்பிக்கை பிறந்துள்ளது. அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று இந்த நேரத்தில்  தெரிவித்துக் கொள்கின்றேன். அமெரிக்காவில் வாழ்கின்ற தமிழர்கள் இன்றைக்கு தொழில் துறையிலும்,  மருத்துவத் துறையிலும் சிறந்து விளங்குகின்றார்கள், களில் பல லட்சம் பேர் பணிபுரிந்து  கொண்டிருக்கின்றார்கள். ஆகவே, இப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்களும், உங்களுடைய நண்பர்களும்  தமிழகத்தில் தொழில் துவங்குவதற்கு முன்வாருங்கள் என்று அழைப்பு விடுக்கின்றேன். இந்த நாட்டிலே  நீங்கள் இருந்தாலும், உங்கள் உள்ளம் எல்லாம் தமிழ்நாட்டில் தான் இருக்கும். ஆகவே, தாய்  தமிழகத்திற்கு உங்களால் முடிந்த உதவிகளை நல்க வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து