முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு 12 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

கர்நாடக அணைகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் 12 மாவட்டகாவிரி கரையோர  மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து விநாடிக்கு 71,896 கன அடி நீர் காவிரியில் திறக்கப்படுகிறது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 50,229 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து விநாடிக்கு 21.667 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் தண்ணீ்ர் திறப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை நிலவரப்படி நொடிக்கு 12,500 கனஅடியாக வந்த கொண்டிருந்த தண்ணீரின் அளவு, நேற்று காலை 27 ஆயிரம் கன அடியாகவும், மாலை சற்று அதிகரித்து நொடிக்கு 28 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்து ஒகேனக்கல்லுக்கு வந்தது. கடந்த சில தினங்களாக காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால், பரிசல் இயக்க அனுமதியளித்து வந்த நிலையில், தற்போது நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும், ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பிரதான அருவி, சினி அருவி, மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவுகளை, மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் கர்நாடகம் மற்றும் கேரள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீர் வினாடிக்கு 15,000 கனஅடியில் இருந்து 35,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையில் 116. 74 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 118 அடியாக உயர்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால், அடுத்த ஒரு சில நாட்களுக்குள் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 18,000 கனஅடி நீர் திறக்கப்பட்டிருந்தது. கர்நாடக அணைகளில் இருந்து வரும் தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக கூடுதல் தண்ணீர் நேற்று இரவு முதல் திறந்து விடப்பட்டது. இதனால் காவரி கரையோர 12 மாவட்ட மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து