முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாதிக்பாட்சா - கலைஞர் தொலைக்காட்சி வழக்கு வெடிக்கும் என்பதால் மவுனம் சாதிக்கிறது தி.மு.க. - அமைச்சர் ஜெயகுமார் குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : சாதிக் பாட்சா மற்றும் கலைஞர் தொலைக்காட்சி வழக்குகள் மீண்டும் வெடிக்கும் என்பதால் தி.மு.க. மவுனம் சாதிப்பதாக அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிக்கையை நானும் படித்தேன். ரயில்வேயின் துறைதேர்வு இது. அவர்கள் ( தி.மு.க) ஆட்சி நடக்கும் போது இது போன்ற துறை தேர்வு நடந்துள்ளது. பதவி உயர்வுக்கான தேர்வு இது. தி.மு.க. ஆட்சி இருந்த காலத்தில் இது போன்ற தேர்வு நடந்த போது மாநில மொழியில் துறை தேர்வுக்கு எடுத்த நடவடிக்கை என்ன? இது குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவிக்க வேண்டும். இது போன்ற அறிக்கை மூலம் ஊரை ஏமாற்றக் கூடாது. வானத்தில் இருந்து குதித்தது போல, தமிழக மக்களுக்கு ஒன்றும் தெரியாதது போல, தமிழ், தமிழ் என்று சொல்லிக் கொள்வது. தமிழை வைத்து வியாபாரம் செய்து பிழைக்கும் குடும்பம் தி.மு.க. தமிழால் தமிழை வைத்துப் பிழைக்கும் குடும்பம் என்று மீண்டும் தெரிவிக்கிறேன். தமிழை எங்கே வளர்த்தார்கள். அறிவியல் தமிழை ஜெயலலிதா தந்தார். 8-வது உலக தமிழ் மாநாட்டையும் ஜெயலலிதா தான் நடத்தினார். உலக தமிழர் ஆராய்ச்சி நிறுவனத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான் உருவாக்கினார். தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக் கழகத்தை அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். அமைத்து தந்தார். செம்மொழி மாநாடு என்ற பெயரில் குடும்பத்தினரை மாநாட்டின் முன்வரிசையில் அமர வைத்து உலகம் முழுவதும் காண்பித்ததுதான் மிச்சம். இந்த மாநாட்டின் மூலம் எந்த பயனும் இல்லை. ஜெயலலிதா எடுத்த முயற்சி காரணமாக  கணினித் தமிழ் வளர்ந்துள்ளது என்றால் அவர் போட்ட விதை இது. தமிழுக்கு உண்மையாக, உணர்வுபூர்வமான தொண்டாற்றுகிற இயக்கம் அ.தி.மு.க.தான். எதுவும் செய்யாமல் தமிழுக்கு நாங்கள்தான் சொந்தக்காரர்கள் என்றால் எப்படி? நிச்சயமாகத் தமிழுக்கு துரோகம் செய்தவர்கள் தி.மு.க.வினர். தேர்வு முறையில் என்ன செய்தார்கள்? 2006 -2011, 1996-2001 இந்த கால கட்டத்தில், மத்திய அரசுடன் முழு ஆதரவுடன் இருந்த நேரத்தில் என்ன செய்தார்கள். இன்றைக்கும் புதிய தேர்வுக்கு மொழி வாய்ப்பு தரப்படுகிறது. ரயில்வே தேர்வில் கூட மொழிவாய்ப்பு தரப்படுகிறது. இவற்றை எல்லாம் மறைத்து தி.மு.க. பேசி வருகிறது. தமிழுக்கு என்றைக்கும் அழிவு என்பது கிடையாது. ஆனால் தமிழுக்கு இவர்களால் ( தி.மு.க.) பாதிப்பு வரும். ப.சிதம்பரம் குறித்த கேள்விக்குப் பதில் அளித்த துரைமுருகன் இது சட்டத்திற்கு உட்பட்டு என்று பதில் அளித்துள்ளார். இது எதைக் காட்டுகிறது. அவர் பம்மி விட்டார் என்று காட்டுகிறது. உண்மையில் நான் கூறியது உண்மையாகிறதா, இல்லையா. காரணம் என்ன என்று எல்லோருக்கும் தெரியும். கலைஞர் தொலைக்காட்சி விவகாரம், ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு இதனை மீண்டும் எடுக்கப் போவதாகச் சொல்கிறார்கள். அது போல சாதிக் மரணம். இதையும் மீண்டும் எடுக்கப் போவதாக சொல்கிறார்கள். இவை அனைத்தும் தி.மு.க. தலைவரின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து