முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடைசி நேரத்தில் சந்திராயனுக்கு ஏற்பட்ட சங்கடம்: நிலவில் தரையிறங்கும் போது லேண்டரின் "சிக்னல்" துண்டிப்பு - விரைவில் வெற்றியடைவோம் - கண்கலங்கிய இஸ்ரோ தலைவர் சிவனுக்கு பிரதமர் மோடி ஆறுதல்

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூர் : சந்திராயன் - 2 விண்கலத்தின் லேண்டர் சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனை கண்ட விஞ்ஞானிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இஸ்ரோ தலைவர் சிவனுக்கு பிரதமர் மோடி கட்டியணைத்து ஆறுதல் கூறினார். பின்னர் இஸ்ரோ விஞ்ஞானிகள் கவலையடைய வேண்டாம், விரைவில் வெற்றியை ஈட்டுவோம் என பிரதமர் மோடி கூறினார்.

நிலவை ஆராய்வதற்காக இந்திய விண் வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), சந்திராயன் -2 விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி. மார்க் -3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 22-ம் தேதி விண்ணில் செலுத்தியது. சந்திராயன் -2 விண்கலம் மொத்தம் 3,850 கிலோ எடை கொண்டது. இதில், தொடர்ந்து நிலவை சுற்றி வரக்கூடிய ஆர்பிட்டர், நிலவில் இறங்கி ஆய்வு செய்யும் விக்ரம் என்ற லேண்டர் கலம், நிலவில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்யக் கூடிய பிரக்யான் என்ற ரோவர் வாகனம் என 3 அதிநவீன சாதனங்கள் உள்ளன.
சந்திராயன் விண்கலத்தின் ஆர்பிட்டர் பகுதியில் இருந்து விக்ரம் என்ற லேண்டர் பாகம் கடந்த 2-ம் தேதி வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.

48 நாட்கள் பயணத்துக்குப் பிறகு, சந்திராயனின் லேண்டர் பகுதி நேற்று அதிகாலை தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இறுதிக்கட்ட பணிகள் மிகவும் சவலானதாக இருந்தது. வேகத்தை குறைத்து நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கச் செய்வது என்பது மிகவும் கடினமான பணியாக விஞ்ஞானிகள் கருதினர். லேண்டரின் வேகத்தை படிப்படியாக குறைத்து பூஜ்ய நிலைக்கு கொண்டு வருவதுதான் இத்திட்டத்தின் சவாலான பணியாகும். அதை வெற்றிகரமாக முடித்து விட்டால் விண்கலம் தரையிறங்குவது எளிதாகி விடும். நிலவுக்கு அருகே லேண்டர் வந்ததும் எதிர்விசை நடைமுறையை பயன்படுத்தி அதன் வேகம் குறைக்கப்படும்.

தரையில் இருந்து 10 மீட்டர் உயரத்துக்கு லேண்டர் வந்ததும், அதன் வேகம் ஒரு நிமிடத்துக்கு 2 மீட்டர் என்ற அளவில் இருக்கும். இறுதியாக லேண்டரின் வேகம் பூஜ்ய நிலையை எட்டியதும் அதை நிலவில் தரையிறக்குவதற்கான பணிகள் தொடங்கும்.

முதலில் எங்கு தரையிறங்குவது என்பதை லேண்டரில் உள்ள சென்சார்கள் ஆராய்ந்து, சமதள பரப்பு உடைய இடத்தை தேர்வு செய்யும். பிறகு, நேற்று அதிகாலை 1.55 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் மான்சினஸ்-சி - சிம்பீலியஸ்-என் என்ற இரு பள்ளங்களுக்கு இடையே லேண்டர் மிக மெதுவாக தரையிறங்கும்.

இந்த நிலையில், சந்திராயன்  - 2 விண்கலத்தின், லேண்டர் சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து, சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் எதுவும் உடனடியாக தெரியவில்லை. இதனை இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வமாக அறிவித்தார். சந்திராயன் - 2 விண்கலத்தின் லேண்டர் சாதனம், நிலவில் தரையிறங்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை காண பெங்களூரு பீன்யாவிலுள்ள இஸ்ரோ கண்காணிப்பு மையத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதை காண்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடியும் பெங்களூர் சென்றிருந்தார். மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 60 மாணவ, மாணவியரும் பெங்களூரு சென்றிருந்தனர். லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை அவர்கள் பார்த்துக் கொண்டு இருந்த போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட தகவல் வெளியானது.

இந்த நிலையில், கர்நாடகாவின் பெங்களூரூவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். பிரதமர் மோடியின் ஊக்க உரையை கேட்ட விஞ்ஞானிகள் சிலர் உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர் விட்டு அழுதனர். பெங்களூரு மையத்தில் பேசி விட்டு புறப்படும் போது பிரதமர் மோடியிடம் இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதார். உடனே சிவனை தன் தோள் மீது சாய்த்து அரவணைத்து தேற்றினார் பிரதமர் மோடி. இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து விஞ்ஞானிகள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என கூறிய பிரதமர் மோடி, இஸ்ரோ மையத்திலிருந்து புறப்பட்டு சென்றார். சந்திராயன் - 2 நிலவில் தரையிறங்கும் என்று ஒட்டுமொத்த நாட்டு மக்களும் எதிர்பார்த்திருந்த நிலையில் சந்திராயனுக்கு ஏற்பட்ட இந்த பின்னடைவு இந்திய மக்கள் மனதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து