முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் படம் பிடித்து அனுப்பியது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிப்பு - இஸ்ரோ தலைவர் சிவன் மகிழ்ச்சி தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூர் : தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் இருப்பிடம் பற்றி தெரியவந்துள்ளது. அதன் இருப்பிடத்தை படம் பிடித்து ஆர்பிட்டர் அனுப்பி இருப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லேண்டரின் தகவல் துண்டிக்கப்பட்ட நிலையில், ஆர்பிட்டர் எடுத்த புகைப்படத்தில் லேண்டர் விக்ரம் இருப்பது தெரியவந்துள்ளது. ஆனாலும், இன்னும் லேண்டருடனான தொடர்பு ஏற்படுத்தப்படவில்லை. தொடர்ந்து லேண்டருடன் தொடர்பை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் தொடர்பு ஏற்படுத்தப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள முதல்கட்ட தகவலின்படி, தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் எங்கே விழுந்துள்ளது என்பது குறித்து ஆர்பிட்டர் எடுத்த புகைப்படங்களின் வாயிலாக தெரிந்துள்ளது. ஆனால் அதன் ஆன்டெனா வழியாக அதனுடனான தகவல் தொடர்பை உடனடியாக உருவாக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் நிலவின் மேற்பரப்பில் உள்ள விக்ரம் லேண்டரின் புகைப்படங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று இஸ்ரோ அமைப்பின் தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மீண்டும் இஸ்ரோ விஞ்ஞானிகளிடையே நமபிக்கை ஏற்பட்டுள்ளது. கீழே விழுந்துள்ள விக்ரம் லேண்டர் சேதமடைந்துள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து, ஆர்பிட்டர் வழியாக தகவல் தொடர்பினை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது. கடந்த மாதம் 20-ம் தேதி சந்திரயான்- 2 விண்கலம் நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைந்தது. அதன்பிறகு படிப்படியாக 5 முறை சந்திரயான் -2 விண்கலத்தின் நிலவின் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது. கடந்த 2-ம் தேதி சந்திரயான் -2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. பின்னர் 2 முறை உள் உந்து விசையை பயன்படுத்தி விக்ரம் லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டு, அதன் சுற்று வட்டப்பாதை மாற்றி அமைக்கப்பட்டது. இதன் மூலம் விக்ரம் லேண்டர் நிலவை நெருங்கியது. இந்நிலையில் சந்திரயான்-2 விண்கல திட்டத்தின் முக்கிய மற்றும் சவாலான நிகழ்வு நேற்று முன்தினம் (சனிக்கிழமை) அதிகாலையில் நடந்தது. சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர்  நிலவை நெருங்கிய நிலையில் அதிலிருந்து சிக்னல் எதுவும் வரவில்லை. சரியாக 2.1 கி.மீ தூரத்தில் இருந்தபோது லேஎண்டர் தரைக்கட்டுப்பாட்டு தளத்துடனான தொடர்பிலிருந்து விலகியது.

இந்நிலையில் நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இஸ்ரோ சிவன் அளித்த பேட்டியில், லேண்டர் இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஏற்கெனவே அவர், தொடர்ந்து 14 நாட்களுக்கு லேண்டரை தொடர்பு கொள்ளும் பணி நடைபெறும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து