முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எரிச்சல், பொறாமையால் தொடர்ந்து எதிர்ப்பு குரல் கொடுக்கும் ஸ்டாலின் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கு

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : துறை சார்ந்த புதிய திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அமைச்சர்கள் வெளிநாடு சென்றார்கள் என்றும் நான் முதலமைச்சராக பதவி ஏற்றது முதல் இன்று வரை எதிர்ப்புக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் ஸ்டாலின் நினைத்தது நடக்கவில்லை, அந்த எரிச்சல், பொறாமையில் இப்படிப்பட்ட வார்த்தைகளை உதிர்க்கிறார் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு 13 நாட்கள் அரசுமுறை சுற்றுப் பயணம் மேற்கொண்டு நேற்று சென்னை திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அவை வருமாறு:-
கேள்வி:- உங்கள் சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்ததா?
பதில்:- தொழில் முதலீட்டாளர்கள், நம்முடைய தமிழகத்தில் புதிய தொழில் துவங்க, எதிர்பார்த்ததைவிட ஆர்வமாக இருக்கின்றார்கள். குறிப்பாக, தமிழ்நாட்டிலிருந்து சென்று வெளிநாட்டில் தங்கி தொழில் செய்பவர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றார்கள். ஆகவே, அவர்களெல்லாம், தமிழகத்திற்கு வந்து, என்னைச் சந்தித்து, தொழில் துவங்க ஆர்வத்தோடு இருக்கின்றார்கள். நீண்ட நாட்களாக தமிழகத்திலிருந்து எந்தவொரு முதலமைச்சரும் வெளிநாடு செல்லவில்லை என்ற குறைபாடு இருந்தது. அந்தக் குறைபாட்டை இப்பொழுது தீர்த்து வைத்திருக்கின்றோம்.
கேள்வி:- கோட், சூட் அணிந்து இந்தியா திரும்புவீர்கள் என்று எதிர்பார்த்தோம், நீங்கள் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையுடன் வந்திருக்கின்றீர்களே?
பதில்:-  வெளிநாட்டிற்கு நாம் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றிருக்கிறோம். அயல் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர்கள் சந்திக்கும்பொழுது, அவர்கள் உடையில் இருந்தால்தான் அது சரியாக இருக்கும். நம்முடைய விருப்பத்தைத் தெரிவிக்காமல் அவர்களுடைய விருப்பத்தை நாம் பூர்த்தி செய்ய வேண்டும்.
கேள்வி:-  இந்த வெளிநாட்டுப் பயணத்தின் போது, கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் எப்பொழுது நடைமுறைக்கு வரும்?
பதில்:-  இவையெல்லாம் குறுகிய காலத்திலே நடைமுறைக்கு வர இருக்கின்றன.  திறமையான தொழிலதிபர்களுடன் தான் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது. இன்னும் பல முதலீட்டாளர்கள் வர இருக்கிறார்கள்.
கேள்வி:- வெளிநாடு சென்று அதிக அளவில் முதலீடு ஈர்க்கப்பட்டு, வேலைவாய்ப்பு அதிகரிக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ச்சியாக அமைச்சர்கள், முதலமைச்சர் மீது விமர்சனம் முன் வைத்து வருகிறாரே?
பதில்:-  நான் முதலமைச்சராக பதவி ஏற்றது முதல் இன்று வரை எதிர்ப்புக் குரல் தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் நினைத்தது நடக்கவில்லை, அந்த எரிச்சல், பொறாமையில் இப்படிப்பட்ட வார்த்தைகளை உதிர்க்கிறார். முதலமைச்சர் மட்டுமல்லாமல், மற்ற அமைச்சர்களும் அவரவர் துறை சார்ந்த புதிய திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக வெளிநாடு சென்றிருக்கிறார்கள். வனத்துறை அமைச்சர் வண்டலூர் பூங்காவை நவீனப்படுத்துவதற்காக வெளிநாடு பயணம் மேற்கொண்டார். இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளில், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய அளவிற்கு, பொழுதுபோக்கு அம்சங்கள் பலவற்றை நவீன முறையில் புகுத்தியிருப்பது போன்று, தமிழகத்திலும் புகுத்த வேண்டும். இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருக்கின்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். சிறிய நாடாக இருக்கக் கூடிய துபாய் எவ்வாறு வளர்ந்துள்ளது என்பதை பார்க்க வேண்டும். தமிழகத்திலும் சரி, இந்தியாவிலும் சரி, அனைத்து வளங்களும் இருக்கின்ற நம்முடைய நாட்டிலும் சுற்றுலாவை மேம்படுத்தலாம், இதனால் பொருளாதாரம் மேம்பாடு அடையும், வேலைவாய்ப்புகள் பெருகும். ஆகவே, சுற்றுலாப் பயணிகள் ஒரு நாட்டுக்கு வந்து சென்று, அந்நாட்டிலுள்ள பல்வேறு அம்சங்களைப் பற்றி அவர்கள் நாட்டில் உள்ள தொழில் அதிபர்களுக்கும், மற்றவர்களுக்கும் தெரிவிப்பார்கள். இது, தமிழகம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்வதற்கான அடித்தளமாக அமையும். துபாய், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குச் செல்பவர்கள் அந்த நாடுகளின் சிறப்புக்களை இங்கு வந்து சொல்வதுபோல், இந்தியாவிற்கு வருபவர்களும் அது போல் சொல்ல வேண்டும் என்பதற்காகத் தான் வெளிநாட்டிற்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டேன்.
கேள்வி:- பபல்லோ நகரில் உள்ள கால்நடை பண்ணைக்கு நேரில் சென்றீர்கள், அந்த அனுபவம் எப்படி இருந்தது?
பதில்:-  மிகச் சிறப்பாக இருந்தது. ஒரே இடத்தில் 3,000 பசுக்கள் வளர்க்கிறார்கள், ஒரு பசு ஒரு நாளைக்கு சுமார் 70 லிட்டர் பால் கொடுக்கிறது. குறைந்த ஆட்களைக் கொண்டு நவீன முறையில் அதைப் பராமரிக்கிறார்கள். தமிழ்நாட்டில், பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில், அதாவது ஒரு மாவட்டத்தில்  70,000 லிட்டர் முதல் 80,000 லிட்டர் வரை பால் சேகரிக்கிறோம். ஆனால் அங்கு ஒரே இடத்தில் ஒரு பண்ணையில் 1,20,000 லிட்டர் பால் கறக்கிறார்கள். தமிழகத்தின் வேளாண் பெருமக்களின் உபதொழிலாக இருப்பது கால்நடை வளர்ப்பு. இங்கு இருக்கும் கால்நடைகள் ஒரு நாளைக்கு 15 முதல் 20 லிட்டர் பால் மட்டும்தான் கறக்கிறது, ஆனால், அங்கு இருக்கும் பசு, ஒரு நாளைக்கு 70 லிட்டர் பால் கறக்கிறது. ஆகவே, அப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகளுக்கு அளிப்பதன் மூலமாக, அவர்கள் கூடுதல் வருமானம் பெறமுடியும். எனவே, அந்த தொழில்நுட்பத்தை கண்டறியச் சென்றோம். அங்கிருக்கின்ற கால்நடைகளின் ஒவ்வொரு கன்றுக்கும் ஒரு பிளாஸ்டிக் கூண்டு கட்டி, ஷெட் அமைத்து, படிப்படியாக தேவையான தட்பவெப்ப நிலையை உருவாக்கி, தீவனம் கொடுத்து, குழந்தைகளைப் போல் வளர்க்கின்றார்கள். இவற்றையெல்லாம் நேரடியாகச் சென்று அறிந்து அதனை தமிழ்நாட்டிலும் பயன்படுத்துகின்ற பொழுது பயனுள்ளதாக இருக்கும்.
கேள்வி:- 40 ஆண்டுகளுக்குப் பின் ஒரு தமிழக முதல்வர் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறீர்கள், அங்கு வாழக்கூடிய மக்கள் எந்த அளவிற்கு உங்களை வரவேற்றார்கள்?
பதில்:- அனைவரும் எங்களை ஆர்வத்துடன் வரவேற்றார்கள். ஏறக்குறைய இரண்டாயிரம் மைலுக்கு அப்பாலிருந்து வந்துகூட நியூயார்க்கில் வரவேற்றார்கள். அங்கு உழைப்பதற்கென்றே தமிழர்கள் பிறந்திருக்கிறார்கள் என்று கருதுகிறேன், அந்த அளவிற்கு உழைக்கிறார்கள், தமிழகத்திற்கு பெருமை சேர்க்கின்றார்கள். அதுமட்டுமல்லாமல், பல தொழிலதிபர்கள் என்னை சந்திக்கின்றபொழுது, தமிழகத்தில் ஐ.டி. பார்க் அமைப்பதற்கு நாங்கள் முன்வருகிறோம் என்று விருப்பம் தெரிவித்திருக்கின்றார்கள். அமெரிக்காவின் IT field-ல் ஏறக்குறைய 35 சதவீதம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் இருக்கிறார்கள். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து