முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 20-ம் தேதிக்குள் லேண்டரை செயல்பட வைக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : நிலவின் மேற்பரப்பில் விழுந்து கிடக்கும் விக்ரம் லேண்டருக்கு புதிய ஆபத்து காத்திருக்கிறது. வரும்  21-ம் தேதி முதல் நிலவில் கடும் குளிர் இரவு வர உள்ளது. இதில் விக்ரம் லேண்டர் சிக்கினால் மீண்டும் செயல்பட வாய்ப்பு இல்லை. எனவே அதற்குள் லேண்டருடன் தகவல் தொடர்பு ஏற்ப்டுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் கடுமையாக போராடி வருகின்றனர். லேண்டர் தொடர்பான முழு விவரங்களை இச்செய்தி குறிப்பில் காண்போம்.

நிலவின் தென் துருவத்தில் சாய்ந்த நிலையில் விழுந்து கிடைக்கும் விக்ரம் லேண்டரை தட்டி எழுப்ப அத்தனை முயற்சிகளையும் முடிக்கி விட்டுள்ளது இஸ்ரோ. லேண்டரை படமெடுத்து அனுப்பிய சந்திராயன் 2 விண்கலம் மூலமே அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்திற்கு தேவையான தினமும் ஏராளமான கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

அதே போன்று பெங்களூரு அருகே உள்ள பய்யாலாலு என்ற இடத்தில் நிறுவப்பட்டுள்ள 32 மீட்டர் ஆன்டெனா மூலமும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆன்டெனா சந்திராயன் 1 திட்டத்திற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். அதன் மூலம் லேண்டருடன் பேச இஸ்ரோ விஞ்ஞானிகள் முனைப்பு காட்டி வருகின்றன. விக்ரம் லேண்டர் 3 டிரான்ஸ்பாண்டர்கள் மற்றும் ஒரு ஆன்டெனாவை கொண்டது. அதன் மேற்பரப்பில் டூ வடிவில் இவை அமைந்துள்ளது. அதன் மூலம் தான் சிக்னலை பெற்று லேண்டர் பதிலளிக்க முடியும். ஆனால் தொடர்பு துண்டிக்கப்பட்டு 100 மணி நேரம் மேலாகியும் லேண்டரில் இருந்து இதுவரை சிக்னல் வரவில்லை. அது நல்ல நிலையில் உள்ளதா, உடைந்து விட்டதா என்பது குறித்து இதுவரை இஸ்ரோ அறிவிக்காதது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. லேண்டரும் அதன் உள்ளே இருக்கும் ரோவரும் சந்திரனில் ஒரு பகல் பொழுதுக்கு மட்டுமே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சந்திரனில் ஒரு பகல் என்பது பூமியின் 14 பகலுக்கு சமம். பகல் பொழுதில் தமக்கு தேவையான ஆற்றலை சூரியனில் இருந்து பெற்றுக் கொள்ளும் வகையில் லேண்டருக்கு வெளியே தகடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதன் படி சூரிய சக்தியை பெற்று லேண்டர் இயங்குவதற்கான 14 நாள் கெடுவில் இதுவரை 5 தினங்கள் முடிந்து விட்டன. இன்னும் 9 தினங்கள் மட்டுமே உள்ளன. அதற்குள் லேண்டர் தனக்கு தேவையான ஆற்றலை சூரியனில் இருந்து பெற்று இயங்குமா என்பதில் மர்மம் நீடிக்கிறது. அதன் பின் சந்திரனில் இரவு தொடங்கி விடும். அது கடும் குளிர் இரவாக இருக்கக் கூடும் என்கின்றனர் விஞ்ஞானிகள். குளிர் இரவில் லேண்டர் சிக்கினால் அது மீண்டும் செயல்படுவதற்கான வாய்ப்பே இல்லை. எனவே அதுவரை விஞ்ஞானிகளின் முயற்சி தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து