முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் எடப்பாடிக்கு பாராட்டு விழா நடத்தினால் தி.மு.க.வுக்குத்தான் மதிப்பு - அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை  :  வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை குவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் பாராட்டு விழா நடத்தினால் தி.மு.க.வுக்கு மதிப்பு கூடும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னையில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

முதல்வருக்கு ஸ்டாலின் எப்போது பாராட்டுக் கூட்டம் நடத்தப் போகிறார் ? எங்களை எப்போது அழைப்பார் ? தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தான் சொன்னதைச் செய்வாரா? செய்வார் என்றுதான் நான் நம்புகிறேன். பாராட்டு கூட்டத்திற்கான ஏற்பாடுகளை விரைந்து செய்தால், அது உண்மையிலேயே ஆரோக்கியமான அரசியல். அப்போது, தமிழகத்தில் இப்படியொரு அரசியலா என உலகமே வியந்து பார்க்கும். அப்படிச் செய்தால், தி.மு.க.வின் மதிப்பும் கூடும். எங்களின் மதிப்பும் கூடும். சொன்னபடி செய்வதுதான் நல்லது. முதலீடுகளை ஈர்க்க முதல்வர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு சென்றனர். அதன்மூலம் எவ்வளவு முதலீடுகள் வந்தன என்பதையும் முதல்வர் விளக்கியிருக்கிறார். ஆனால், 1996-ல் தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி சிங்கப்பூர் சென்றார். எதற்காக  சென்றார் ? தனிப்பட்ட விஷயங்களுக்காக சென்றார். அப்படியா நாங்கள் சென்றோம் ? யாரையும் குற்றம் சொல்லக் கூடாது. ஆனால், ஸ்டாலின் இப்படிப் பேசினால் வரலாற்றைச் சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம். ஸ்டாலின் பல வெளிநாடுகளுக்கு சென்றிருக்கிறார். இதில் எங்கெல்லாம் அலுவல் ரீதியாக சென்றிருக்கிறார். எவ்வளவு முதலீடுகள் கொண்டு வந்தோம் என ஸ்டாலின் எங்களுக்கு அறிக்கை கொடுக்கட்டும். அதை முதலில் செய்யட்டும். ஆனால், அவர்களால் அதனைக் கொடுக்க முடியாது. கூவத்தை சுத்தப்படுத்துகிறோம் என துணை முதல்வராக இருந்த ஸ்டாலின், சென்னை மேயராக இருந்த மா. சுப்பிரமணியனுடன் வெளிநாடு சென்றார். ஆனால், கூவம் சுத்தமாகி விட்டதா? வெளிநாட்டுக்கு செல்ல எவ்வளவு செலவானது? ஆனால், கூவத்தை இந்த அரசு தான் முழுமையாக சுத்தப்படுத்துகிறது. தன் மீது குற்றத்தை வைத்துக் கொண்டு அடுத்தவர் மீது ஸ்டாலின் குற்றம் சுமத்துகிறார். வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்த்ததற்கு, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் திறந்த மனதுடன் பாராட்ட வேண்டும். நல்ல எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின், பாராட்டுக் கூட்டம் நடத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகத்திற்கு நிறைய அந்நிய முதலீடுகள் வந்திருக்கின்றன. ஆனால், தி.மு.க. அட்சியில் எவ்வளவு முதலீடுகள் வந்தன என விவாதம் நடத்தத் தயாரா? 2001-2006 இல், தொழில் நுட்பத் துறை அமைச்சராக என் தலைமையில் வெளிநாடுகளுக்கு  சென்று சிறந்த நிறுவனங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தோம். ஹூண்டாய், போர்டு போன்றவை அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை. அதன் பிறகு, தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டது. ஆனால், விதை அ.தி.மு.க. போட்டது. எவ்வளவு முதலீடுகள் கொண்டு வந்தோம் என்பதை எங்களால் சொல்ல முடியும். ரூ. 40,000 கோடி முதலீடு கொண்டு வந்ததாக ஸ்டாலின் சொல்வதை விளக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து