முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராட்ட மனமின்றி குறுகிய எண்ணத்தோடு பேசுகிறார்: தி.மு.க. ஆட்சியில் தமிழகத்திற்கு எத்தனை முதலீடுகள் பெறப்பட்டது? மு.க. ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி கேள்வி

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சேலம் : தி.மு.க. ஆட்சியில் தமிழகத்திற்கு எத்தனை முதலீடுகள் பெறப்பட்டன. எத்தனை வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்பட்டன என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூடான கேள்வி எழுப்பி உள்ளார்.

இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து விட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதை தொடர்ந்து முதல்வர் கோவை புறப்பட்டு சென்றார். அங்கும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

நான் வெளிநாடு சென்றிருந்த போது அங்குள்ள தமிழர்கள் எனக்கு நல்ல வரவேற்பு அளித்தனர். அதே போல் சென்னை திரும்பிய போதும், கோவையிலும் எனக்கு உற்சாக வரவேற்பு அளித்த அமைச்சர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறிய போது ஒரு நிருபர் குறுக்கிட்டு, மு.க. ஸ்டாலின் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து முதல்வர் கூறியதாவது,

தி.மு.க. ஆட்சியில் இருந்த போது தமிழகத்திற்கு எத்தனை முதலீடுகள் பெறப்பட்டன? எத்தனை வெள்ளை அறிக்கைகளை அவர்கள் வெளியிட்டார்கள் என்று சொல்ல முடியுமா? 2006 முதல் 2011 வரை அவர்கள் ஆட்சியில் வெறும் 26 ஆயிரம் கோடி அளவுக்குத்தான் முதலீடுகள் பெறப்பட்டன. ஆனால் அம்மா முதலமைச்சராக இருந்த போது 2015-ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அதன் மூலம் 2.45 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இவற்றில் 53 ஆயிரம் கோடிக்கு முதல் கட்டமாக முதலீடுகள் பெறப்பட்டு அவற்றில் 29 தொழில்கள் துவங்கப்பட்டுள்ளன. புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டவுடனேயே தொழிலை துவங்கி விட முடியாது. முதலில் நிலத்தை கையகப்படுத்த வேண்டும். பிறகு அதற்குரிய நிதி ஆதாரத்தை திரட்ட வேண்டும். பெரிய தொழிலாக இருந்தால் கிட்டத்தட்ட இதற்கே 5 ஆண்டுகளாகும். குறைவான முதலீட்டு தொழிலாக இருந்தால் குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாகும்.

குறை சொல்ல தகுதியில்லை

ஆகவே எங்களை குறை சொல்ல ஸ்டாலினுக்கு தகுதியில்லை. எனது பயணத்தின் மூலம் 8,830 கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்த போது 4 மாதத்திற்கு ஒரு முறை வெளிநாடு சென்று வந்துள்ளார். ஆனால் தமிழகத்தில் இருந்து 40 ஆண்டு காலமாக யாருமே வரவில்லை என்று வெளிநாட்டவர்கள் என்னிடத்தில் சொன்னார்கள். இப்போது நீங்கள் வந்திருப்பது மகிழ்ச்சி என்றும் அவர்கள் சொன்னார்கள். மேலும் நாங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வருகிறோம் என்றும் அவர்கள் கூறினார்கள். இவ்வாறு முதல்வர் எடப்பாடி கூறினார். அப்போது ஒரு நிருபர் குறுக்கிட்டு, உங்களுக்கு பாராட்டு விழா நடத்தத் தயார் என்று ஸ்டாலின் சொல்கிறாரே என்று கேள்வி எழுப்பினார்.

விமர்சனம் செய்யாமல் இருந்தாலே போதும்

இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எங்களை விமர்சனம் செய்யாமல் இருந்தாலே போதும். அவருக்கு பாராட்டவே மனமில்லை. குறுகிய எண்ணம் படைத்தவர் ஸ்டாலின். அதனால்தான் இப்படி பேசுகிறார் என்று முதல்வர் பதிலளித்தார். மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் கோவை மாவட்டத்தில் அத்திக்கடவு - அவினாசி திட்டத்துக்கு ஒப்பந்தம் போடப்பட்டு பணி துவங்கப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார். மேலும் கோவை மாநகராட்சியில் குன்னம் சந்திப்பில் ஒரு மேம்பாலம், உக்கடம் சந்திப்பில் ஒரு மேம்பாலம் கட்டப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார். கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்துவது பற்றி ஆய்வு நடப்பதாகவும் கூறிய முதல்வர், இங்கு புதிய பஸ் நிலையம் விரைவில் கட்டப்படும் என்றும் தெரிவித்தார். அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார். நான் இஸ்ரேல் செல்வதை ஸ்டாலின் கிண்டலடிக்கிறார். உபரி நீரை சேமிக்க முடியவில்லை. எதற்கு இஸ்ரேல் பயணம் என்றெல்லாம் கேட்கிறார். இவர்கள் ஆட்சிக் காலத்தில் எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டன. உங்கள் தந்தையார் முதல்வராக இருந்த போது எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டது. அதையெல்லாம் தெரிந்து ஸ்டாலின் பேச வேண்டும். நாங்கள் புகழூர் காகித ஆலை அருகே தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். காவிரியில் கொள்ளிடம் வரை மேலும் 3 தடுப்பணைகள் கட்ட ஆய்வு நடந்து வருகிறது. நீர் மேலாண்மையை உருவாக்க ஓய்வு பெற்ற 5 பொறியாளர்களை நியமித்துள்ளோம். தண்ணீர் எங்கு வீணாகிறது என்பதை கண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தடுப்பணை கட்டுவதற்காக ரூ. ஆயிரம் கோடி இந்த அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே அரசின் செயல்பாடுகள் பற்றி தெரிந்து பேச வேண்டும். ஒரு சொட்டு நீரை கூட நாங்கள் வீணாக்க மாட்டோம். ஏரி, குளங்கள் தூர்வார இந்த அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஊழல் என்கிறார் ஸ்டாலின். இதற்கு 90 சதவீத நிதி அரசால் ஒதுக்கப்படுகிறது. 10 சதவீதம்தான் விவசாயிகளுக்கு. இந்த பணியை அவர்களிடமே ஒப்படைத்து விடுகிறோம். பின்னர் இப்படி இதில் ஊழல் செய்ய முடியும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறினார். அப்போது அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து