முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக முன்னாள் அமைச்சரின் மகள் அமலாக்க துறை முன் ஆஜர்

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாரின் மகள் அமலாக்க துறை முன் நேற்று ஆஜரானார். 

குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டணி ஆட்சியில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்தவர் டி.கே. சிவக்குமார். இவருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் டெல்லியில் அவருக்கு சொந்தமான வீட்டில் இருந்து ரூ. 8.59 கோடி கணக்கில் வராத பணம் சிக்கியது. இது குறித்து விசாரணை நடத்த அமலாக்கத்துறையை வருமான வரித்துறை கேட்டு கொண்டது. அதன்படி அமலாக்கத்துறையினர், டி.கே. சிவக்குமார் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கை பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணைக்கு ஆஜராகும்படி டி.கே. சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அந்த சம்மனை ரத்து செய்ய கோரிய டி.கே. சிவக்குமாரின் மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.

இதையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு டி.கே. சிவக்குமார் ஆஜரானார். 4 நாட்கள் விசாரணை நடத்திய பிறகு கடந்த 3-ம் தேதி அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அவர் தற்போது (13-ம் தேதி வரை) போலீஸ் காவலில் உள்ளார். அவரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து அவர் டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். மேலும் 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்குமாறு அமலாக்கத்துறையினர் கேட்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்றைய தினம், டி.கே. சிவக்குமார் ஏற்கனவே தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதும் விசாரணை நடைபெற உள்ளது.

இதனிடையே, சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு நேற்று நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உத்தரவிட்டு இருந்தது. நிர்வாக படிப்பு படித்து வரும் ஐஸ்வர்யா, டி.கே. சிவக்குமார் நடத்தி வரும் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலராக இருந்து வருகிறார். இதன்கீழ் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துகளும் மற்றும் தொழில்களும் நடந்து வருகின்றன. பொறியியல் மற்றும் பிற கல்லூரிகள் செயல்பட்டு வருவதுடன், அவற்றை பின்புலத்தில் இருந்து இயக்கும் முக்கிய நபராக ஐஸ்வர்யா இருந்து வருகிறார் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அமலாக்க துறை முன் அவர் நேற்று ஆஜரானார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து