முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்கிரவாண்டி- நாங்குநேரி இடைத்தேர்தல் - அ.தி.மு.க.வுக்கு ஜி.கே.வாசன் முழு ஆதரவு

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுகின்ற அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு த.மா.கா. முழு ஆதரவு அளித்து அவர்களின் வெற்றிக்கு உறுதியோடு களப்பணியாற்றும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் காலியாகவுள்ள விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கும், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிக்கும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த இரண்டு தொகுதி இடைத்தேர்தலிலும் அ. தி.மு.க.வின் வேட்பாளர்களை த.மா.கா. ஆதரிக்கிறது. இரண்டு தொகுதிகளிலும் த.மா.கா.வின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அ.தி.மு.க.வினுடைய வெற்றியை உறுதி செய்யக்கூடிய வகையிலே களப்பணியாற்றுவார்கள்.

2018 - 19 ஆம் ஆண்டின் தேசிய வளர்ச்சி விகிதமான 6.81 சதவீதத்தைவிட தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. அதாவது பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்து எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் படி தமிழகத்தில் 2018 - 19 ஆம் ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.17 சதவீதம் என பதிவாகிவுள்ளது. எனவே, தமிழக அரசு விவசாயிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாகவும், தொழில் துறையில் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவும், வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்பதற்காகவும் மேற்கொண்டு வரும் முயற்சிகள் தமிழக மக்களுக்கு பெரும் பயன் தரும் என்பது வெளிப்படுகிறது. குறிப்பாக ஒட்டு மொத்த தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்கின்ற அரசாக அ.தி.மு.க. அரசு செயல்படுகிறது. இதுவே நடைபெற இருக்கின்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றிக்கு அடித்தளம். எனவே நடைபெற இருக்கின்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு த.மா.கா. முழு அதரவு அளித்து, வாக்கு சேகரித்து அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து