முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமரின் அழைப்பு குறித்து ஜி.கே. வாசன் விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 13 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பிரதமர் மோடியின் அழைப்பு குறித்து த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை வந்த மோடியை வரவேற்க தமிழக அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் சென்றிருந்த நேரத்தில் ஜி.கே.வாசனும் வரவேற்றார். அப்போது, ஜி.கே வாசனிடம் கை குலுக்கிய மோடி, கடந்த முறை நீங்கள் வீட்டிற்கு வருவதாக சொன்னீர்கள், வரவில்லையே? கட்டாயம் வர வேண்டும் என அன்புடன் கேட்டார். இந்த சந்திப்பு அன்பான விசாரிப்பு தான் என்று பா.ஜ.க. வட்டாரத்தில் கூறப்பட்டது. ஆனால் பா.ஜ.க.வில் ஜி.கே.வாசன் சேருவார் என்றெல்லாம் வலைத்தளங்களில் தகவல்கள் பரவ தொடங்கி விட்டன. இது பற்றி ஜி.கே. வாசனிடம் கேட்ட போது,

பிரதமர் மோடி பல கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் பேசி வருபவர். என்னிடம் மறக்காமல் டெல்லிக்கு வர வேண்டும் என பேசியது நெகிழ்ச்சி. கோவையில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது அவசியம் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்தார். அப்போது பேசிய விவரங்களை இதுவரை நினைவில் வைத்திருப்பது சிறந்த பண்பு. அவர் டெல்லி திரும்பிய பின்னர், அவரை சந்திக்க செல்வேன். தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் தான் எங்கள் களம். அடுத்த சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சியின் சார்பாக இரட்டை இலக்க எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களை அனுப்ப வேண்டும் என்பது எங்கள் இலக்கு. அ.தி.மு.க. -பா.ஜ.க கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணி தலைவர் ஒருவரை நினைவுகூர்ந்து மோடி பேசியதற்கு அரசியல் சாயம் பூசக்கூடாது.

ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை தெரிவிக்க ஜனநாயகத்தில் இடம் உண்டு. ஆனால் சிலர் அரசியல் லாபத்திற்காக, தங்களது நோக்கத்திற்காக டுவிட்டரில் ட்ரெண்ட் செய்வது தவறு. மோடி மட்டுமல்ல எந்த அரசியல்தலைவரையும் திரும்பிப் போ என ட்ரெண்ட் செய்வது தேவையற்றது. இதனால் எந்த லாபமும் இல்லை. மோடியின் வருகையின் போது அவருக்கு எதிராக டிரெண்ட் செய்து அரசியல் ஆதாயம் தேடக் கூடாது. சீனா அதிபருடன் இந்திய பிரதமர் மாமல்லபுரத்தில் நடத்திய சந்திப்பு உலகளவில் கவனம் பெற்றுள்ளது. வர்த்தகம், பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இரண்டு தலைவர்களும் ஒருவருக்கொருவர் பேசுவதற்கான வாய்ப்பு நம் தமிழகத்தில் ஏற்படுத்தபட்டது என்பது நமக்கு பெருமை தரும் வி‌ஷயம். பல்லவர் காலத்தில் இருந்து சீனாவுக்கும், தமிழகத்திற்கும் வர்த்தக தொடர்பு இருந்தது. தற்போது இரண்டு நாட்டு தலைவர்களும் இங்கு வந்தது நம் மாநிலத்திற்கு, நம் தமிழ் மக்களுக்கு பெருமை. குறிப்பாக இந்த சந்திப்பின் போது தமிழர்களுக்கும், தமிழ்நாட்டின் பாரம்பரியத்துக்கும் பெருமை சேர்க்கும் வகையிலே பாரதப் பிரதமர் வேட்டி, சட்டை அணிந்து சீன அதிபரோடு சென்றதும், கலந்துரையாடியதும் தமிழர்களுக்கு பெரிதும் பெருமையாக இருந்தது. மேலும் தமிழர்களின் பாரம்பரிய உணவை உபசரித்தது, கலைஞர்களின் கலை வண்ணத்தை எடுத்துக் காட்டியது, பட்டுத்துணியை சீன அதிபருக்கு பரிசாக தந்தது போன்ற பல்வேறு நிகழ்வுகள் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகளாகும். இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுக்கு அடித்தளமிட்ட பாரதப் பிரதமருக்கு முதலில் த.மா.கா சார்பில் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து