சீனாவில் ரசாயன ஆலையில் வெடி விபத்து: 4 பேர் பலி

புதன்கிழமை, 16 அக்டோபர் 2019      உலகம்
china chemical plant blast 2019 10 16

பீஜிங் : சீனாவில் தனியாருக்கு சொந்தமான ரசாயன ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சி பிராந்தியமான குவாங்சி ஜூவாங்கில் உள்ள யூலின் நகரில் தனியாருக்கு சொந்தமான ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இங்கு நேற்று முன்தினம் காலை ஏராளமான தொழிலாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் ஆலைக்குள் திடீரென வெடி விபத்து நேரிட்டது. அதனை தொடர்ந்து ஆலைக்குள் தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அலறியடித்தபடி ஆலையை விட்டு வெளியே ஓடினர். எனினும் சில தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் 4 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. மேலும் 3 பேர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து