முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்கிரவாண்டி தொகுதியில் சூறாவளி பிரச்சாரம்: ஜெயலலிதா இறப்புக்கு காரணமே கருணாநிதியும், ஸ்டாலினும்தான்! முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 17 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

விழுப்புரம் : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்புக்கு காரணமே கருணாநிதியும், ஸ்டாலினும்தான் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விக்கிரவாண்டி தொகுதியில் நடந்த பிரச்சாரத்தின் போது குற்றம் சாட்டினார்.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக ரெட்டியார்பட்டி நாராயணன் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் இவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுகிறார். விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக முத்தமிழ் செல்வன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே இத்தொகுதியில் 2 நாள் பிரச்சாரம் செய்தார். நேற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் முதல்வர் எடப்பாடி தும்பூர் பகுதியில் பிரச்சாரம் செய்தார். திறந்த வேனில் நின்றபடி அவர் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது,

தேர்தல் பிரச்சாரத்தின் போது மு.க. ஸ்டாலின் பேசும் போது, நாங்கள் பொய் சொல்வதாக சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் நாங்கள் புள்ளி விவரத்தோடு பேசுகிறோம். அரசின் சாதனைகளை ஆதாரத்தோடு பட்டியலிட்டு பேசி வருகிறேன். அருமையான சாலைகளை அமைத்திருக்கிறோம். உள்கட்டமைப்பு வசதிகள் இங்கு சிறப்பாக உள்ளது. ஆனால் மு.க. ஸ்டாலினோ பச்சைப் பொய்களை அவிழ்த்து விடுகிறார்.

நீட் தேர்வுக்கு தி.மு.க. - காங்கிரசே காரணம்:

நீட் தேர்வை நாங்கள் அறிவித்ததாக சொல்கிறார். ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதுதான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. ஆனால் நாங்களோ அதற்கு முழு விலக்கு கேட்டு போராடினோம். தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கூட நிறைவேற்றப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அது நிலுவையிலும் இருக்கிறது. ஆக, நீட் தேர்வுக்கு எதிராக அத்தனை நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்துள்ளது. ஆனால் நீட் தேர்வை கொண்டு வந்ததே தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிதான். இதை ஸ்டாலினால் மறுக்க முடியுமா?

கருணாநிதியும், ஸ்டாலினும் காரணம்

அது மட்டுமல்ல, அம்மா மரணத்தை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என்று கூசாமல் பொய் சொல்கிறார். மறைந்த முதல்வர் அம்மா மீது பொய் வழக்குகளை போட்டது தி.மு.க.தான். அதனால்தான் அவரது உடல்நலமே பாதிக்கப்பட்டது. அம்மாவை பழிவாங்க பல நடவடிக்கைகளை எடுத்தது தி.மு.க.தான். எனவே அம்மாவை பற்றி பேச தி.மு.க.வுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. ஆடு நனையுதே என்று ஓணாய் அழுத கதையாக உள்ளது. அம்மாவின் இறப்புக்கு காரணமே அன்றைய தி.மு.க. தலைவர் கருணாநிதியும், இன்றைய தி.மு.க. தலைவர் ஸ்டாலினும்தான். நிரபராதி என்று கோர்ட்டில் அறிவிக்கப்பட்ட பிறகும் மேல்முறையீடு செய்தவர்கள் இவர்கள். ஆனால் நாங்கள் அம்மா மரண விவகாரத்தில் விசாரணை கமிஷன் அமைத்தோம். எனவே ஸ்டாலின் அரசியல் ஆதாயத்துக்காக மக்களை குழப்புகிறார். பொய் பேசுவது தி.மு.க.வுக்கு கைவந்த கலை.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசியவர் ஸ்டாலின். 5 சவரனுக்கு கீழே உள்ள அடமான நகைகள் திருப்பி தரப்படும் என்று சொன்னார். அப்படி சொன்னவாறு திருப்பி தந்தாரா? தேர்ந்தெடுக்கப்பட்ட 38 தி.மு.க. எம்.பி.க்களும் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. உள்ளாட்சி தேர்தலை நாங்கள் நடத்தவில்லை என்கிறார். ஆனால் 26.09.2016 அன்று உள்ளாட்சி தேர்தல் பற்றிய அறிவிப்பை வெளியிட்டோம். ஆனால் தி.மு.க. இட ஒதுக்கீட்டை காரணம் காட்டி நீதிமன்றத்தில் வழக்கு போட்டு தடை வாங்கியது. ஆக, உள்ளாட்சி தேர்தல் தாமதமாக நாங்கள் காரணமல்ல.

2019-ம் ஆண்டு இறுதிக்குள்...

2019-ம் ஆண்டு இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவியேற்பார்கள். இட ஒதுக்கீட்டை நிறைவேற்றவே தாமதம் ஏற்பட்டது. மேலும் எல்லாமே சரி செய்யப்பட்டு விட்டது. ஆனால் மு.க. ஸ்டாலின் போகிற இடமெல்லாம் தோல்வி பயத்தில்,தோல்வியின் விளிம்பில் ஏதேதோ பேசுகிறார்.

அ.தி.மு.க ஆட்சியில் ஒன்றுமே நடக்கவில்லையாம். நந்தன் கால்வாய் திட்டத்துக்கு ரூ. 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏரிகள் அனைத்தும் நிரம்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சொட்டு நீர் கூட வீணாகாத வகையில் பாடுபட்டு வருகிறோம். ஆனால் மு.க. ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது என்ன செய்தார்? தேர்தல் வரும்போதுதான் அவருக்கு திண்ணை ஞாபகம் வருகிறது. எனவே அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ் செல்வனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து