முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் தேர்தல் பிரசாரம் இன்று ஓய்கிறது: 21-ம் தேதி வாக்குப்பதிவு

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

விக்கிரவாண்டி, நாங்குநேரி இரு தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதையடுத்து இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க.-தி.மு.க. மூத்த தலைவர்கள் இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.   

நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் எம்.பி.யாகி இருப்பதால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதி காலியாக உள்ளது.

இதற்கிடையே விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. எம்.எல்.ஏ. ராதாமணி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்ததால் அந்த தொகுதியும் காலி இடமாக இருந்தது. இந்த இரு தொகுதிகளுக்கும் வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் நாராயணன், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன் போட்டியிடுகிறார்கள். விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ் செல்வன் தி.மு.க. சார்பில் புகழேந்தி போட்டியிடுகிறார்கள்.

நாங்குநேரியில் மொத்தம் 23 வேட்பாளர்களும், விக்கிரவாண்டியில் 8 வேட்பாளர்களும் உள்ளனர். கடந்த 2 வாரமாக 2 தொகுதிகளிலும் தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. இந்த தொகுதிகளில் அ.தி.மு.க.- தி.மு.க. கூட்டணி இடையே நேரடி பலப்பரீட்சை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இரு தொகுதிகளிலும் இன்று  மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய உள்ளது. இதையடுத்து இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க.-தி.மு.க. மூத்த தலைவர்கள் இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 13, 14-ந்தேதிகளில் முதற்கட்ட பிரசாரம் மேற்கொண்டார். துணை முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் 15-ந்தேதி முதல்  தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டார். கடந்த 8, 9, 10-ந்தேதிகளில் முதற்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 15, 16-ந் தேதிகளில் 2-ம் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நாங்குநேரி தொகுதியில் 3 நாட்கள் பிரசாரம் செய்திருக்கிறார். 

இதேபோல் வைகோ, முத்தரசன், நல்லக்கண்ணு, பிரேமலதா, ஜி.கே.வாசன், சரத்குமார் உள்ளிட்ட தலைவர்களும் நாங்குநேரி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாங்குநேரி தொகுதியில் நேற்று  மாலை இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.  

பின்னர் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட பாளை கே.டி.சி. நகர், கிருஷ்ணாபுரம், சீவலப்பேரி, பொன்னாக்குடி, முன்னீர்பள்ளம் ஆகிய பகுதிகளுக்கு திறந்த வேனில் சென்று இரட்டை இலைக்கு வாக்குசேகரித்தார்.  விக்கிரவாண்டி தொகுதியிலும்  இன்று மாலை பிரசாரம் ஓய்ந்த பிறகு ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 
நாங்குநேரி தொகுதியில் மொத்தம் 299 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த தொகுதியில் 1,400 பேர் ஓட்டுப்பதிவு பணிகளில் ஈடுபட உள்ளனர். பாதுகாப்புக்காக 800 போலீசார், 3 கம்பெனி துணைநிலை ராணுவத்தினர், 3 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் 225 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 1,331 பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். அங்கும் சுமார் 1000 போலீசார், 3 கம்பெனி துணைநிலை ராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். இரண்டு தொகுதிகளிலும் பதட்டமான ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட உள்ளனர். 

அதிகளவு ஓட்டுப்பதிவை பெற வேண்டும் என்பதற்காக வாக்குப்பதிவு தினமான 21-ந்தேதி இரு தொகுதிகளிலும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இரு தொகுதிகளிலும் உள்ள தொழிற்சாலைகள் தங்களது ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் மட்டுமின்றி வருகிற 21-ந்தேதி பள்ளி-கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து