ஜெயலலிதா மீது பொய் வழக்குப் போட்டு துன்புறுத்தியவர்களை இந்த இடைத்தேர்தல் மூலம் அரசியல் ரீதியாக தண்டியுங்கள் - வாக்காளர்களுக்கு இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் வேண்டுகோள்

சனிக்கிழமை, 19 அக்டோபர் 2019      தமிழகம்
cm eps - deput cm ops 2019 09 01

சென்னை : ஜெயலலிதா மீது பொய் வழக்கு போட்டு அவரை தாங்க முடியாத துன்பங்களுக்கு உள்ளாக்கியவர்களை அரசியல் ரீதியாக தண்டிக்க தேர்தல் களம்தான் சரியான வாய்ப்பு என்றும் இந்த இடைத்தேர்தல் மூலம் அரசியல் ரீதியாக அவர்களை தண்டியுங்கள் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வாக்காளர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

நாளை 21-ம் தேதி நடைபெற இருக்கும் உங்கள் தொகுதிகளின் இடைத் தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை அ.தி.மு.க.வின் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்தில் அளித்திடக் கேட்டு, உங்களை நேரில் சந்திக்க நாங்கள் வந்திருந்த நேரம் நீங்கள் அளித்த பாசமிகு வரவேற்புக்கு நன்றி கூறி மகிழ்கிறோம். எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் இரண்டு தொகுதி வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள், எங்கள் இருவருக்கு மட்டுமின்றி, அ.தி.மு.க.வின் விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் முத்தமிழ்செல்வன் , நாங்குநேரி தொகுதி வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோருக்கும், அவர்களோடு தேர்தல் பணி ஆற்றிய கட்சியின் தொண்டர்களுக்கு உடன்பிறப்புகளுக்கு வழங்கிய ஒத்துழைப்பும், வரவேற்பும் அ.தி.மு.க. வெற்றிக்கு முன்னறிவிப்புகளாக இருந்தன. இத்தகைய பேரன்புக்குரிய வாக்காளப் பெருமக்களுக்கு எங்களது சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

விக்கிரவாண்டி தொகுதியிலும், நாங்குநேரி தொகுதியிலும் நீங்கள் பெருவாரியான எண்ணிக்கையில் அ.தி.மு.க.வின் இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து கழக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும்போது, அது ஜெயலலிதா அமைத்துத் தந்த அ.தி.மு.க. அரசுக்கு மேலும் வலுவூட்டுவதாக அமைந்திடும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசியல் களத்திலும், அறிவின் மேன்மையிலும், உழைப்பின் மாட்சியிலும் தன்னை நேருக்கு நேராக சந்திக்கும் திறன் அற்ற விரோதிகளும், துரோகிகளும் தனக்கு எதிராக நடத்திய அத்தனை தாக்குதல்களையும், தன் மீது புனையப்பட்ட அத்தனை பொய் வழக்குகளையும் துணிவுடன் எதிர்கொண்டார். அந்த நெடிய போராட்டத்தில் தன்னுடைய உடல் நலனை பாதுகாக்காமல் நம்மையெல்லாம் விட்டு விட்டுச் சென்று விட்டாரே என்பதை நினைக்கும் போது நெஞ்சே வெடித்து விடும் போலிருக்கிறது.

ஜெயலலிதா மீது பொய் வழக்கு போட்டு அவரை தாங்க முடியாத துன்பங்களுக்கு உள்ளாக்கியவர்களை அரசியல் ரீதியாக தண்டிக்க தேர்தல் களம்தான் சரியான வாய்ப்பு. உங்கள் பொன்னான வாக்குகளை எம்.ஜி.ஆர் கண்ட வெற்றிச் சின்னமும், ஜெயலலிதா பாதுகாத்த ஒப்பற்ற சின்னமுமான இரட்டை இலைச் சின்னத்தில் பதிவு செய்வதன் மூலம், ஜெயலலிதாவின் அகால மரணத்துக்கே காரணமானவர்களை நீங்கள் அரசியல் ரீதியாக தண்டிப்பீர்கள் என்பது எங்களது உறுதியான நம்பிக்கை. ஜெயலலிதாவின் வேதனை மிகுந்த மரணத்திற்குப் பிறகு, அவரது முயற்சியாலும், உழைப்பாலும் உருவாக்கப்பட்ட தமிழக அரசை, உங்கள் ஆசி பெற்ற நாங்கள் வெற்றிகரமாக காப்பாற்றி நம் மாநிலத்திற்கு நிலையான அரசை கொடுத்திருக்கிறோம். அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத நாடு எந்தவித வளர்ச்சியையும் அடைய முடியாது. உறுதியான அரசின் செயல்பாடுகளால்தான் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட முடியும். அதை மிகச் சிறப்பாக செய்திருக்கும் அரசாக இன்றைக்கு தமிழக அரசு விளங்குகிறது. அரசின் இந்த வலிமையை உறுதிசெய்யும் வகையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களை நீங்கள் மகத்தான வெற்றியடைய செய்யும் போது, அது அரசு நிர்வாகத்தையும், நலத்திட்டப் பணிகளின் செயலாக்கத்தையும் மேலும் பொலிவுடையதாக்கும் என்பதால்தான் உங்கள் மேலான ஆதரவை வேண்டி நிற்கின்றோம்.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் மிகச் சிறப்பாக உள்ளதென்று பொருளாதார வல்லுநர்கள் புள்ளி விவரங்களோடு விவரித்து பூரிக்கின்றனர். புதிய, புதிய தொழில்கள் பல தமிழ் நாட்டில் தொடங்கப்பட்டு நம் பிள்ளைகளுக்கு சிறந்த வேலைவாய்ப்புகள் உருவாகி கொண்டிருக்கின்றன. மாநிலம் முழுவதும் ஏரி, குளங்களை தூர்வாரும் குடிமராமத்துப் பணிகள் செய்யப்பட்டிருப்பதால் அண்மையில் பெய்த மழைநீர் சேகரிக்கப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து நடைபெற இருக்கும் விவசாயப் பணிகளுக்கு இது பெரிதும் உற்சாகமூட்டும். எல்லோருக்கும் பொங்கல் பரிசு வழங்கிய நமது அரசு, வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளோருக்கான சிறப்பு உதவித் தொகையையும் அளித்திருக்கிறது. அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறுவோருக்கும் வழங்கப்பட வேண்டிய அனைத்துப் பயன்களும் உரிய நேரத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.

உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவரான சீன அதிபரை, பிரதமர் சந்தித்துப் பேச தமிழ்நாடே சிறந்த இடம் என்று இந்திய அரசே முடிவு செய்யும் அளவிற்கு பொது அமைதியும், சட்டம்-ஒழுங்கும் சிறப்பாக தமிழ் நாட்டில் காப்பாற்றப்படுவதை உலகமே பாராட்டுகிறது. இத்தனை சிறப்புக்குரிய ஆட்சிக்கு மேலும் பெருமை சேர்க்கவே உங்கள் அன்பான ஆதரவை வேண்டுகிறோம். தேர்தல் களத்தில் நம்மை எதிர்ப்போர் யார் என்று பாருங்கள். எப்படியாவது பதவிக்கு வந்து விட வேண்டும். குடும்ப அரசியலை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற ஒரே கொள்கை கொண்ட கூட்டமே நம்மை எதிர்த்து நிற்கிறது. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்று துடிக்கும் தி.மு.க. ஆட்சியில் நடந்த அராஜகங்களையும், கட்டப் பஞ்சாயத்துகளையும், சாதிச் சண்டைகளையும், தமிழ் நாட்டையே முடக்கிப் போட்ட, இருள் பரப்பிய மின்வெட்டுகளையும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். நில அபகரிப்பு, அரசு ஊழியர்கள் நிம்மதியாக பணியாற்ற முடியாத அச்சுறுத்தல், ஒரு குடும்பத்தின் அசுரப் பிடியில் தமிழ் நாட்டின் மொத்த நிர்வாகமும் சிக்கித் தவித்த கொடுமை எல்லாம் இப்போது இல்லை.

இப்போது நடைபெறுவது அன்பும், பாசமும், கருணையும் கொண்ட அரசு. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது அன்புத் தொண்டர்களால் வழிநடத்தப்படும் உண்மையான மக்கள் அரசு. மக்களின் தேவைகள் அனைத்தையும் உடனுக்குடன் நிறைவேற்ற எந்நேரமும் பாடுபடும் இந்த அரசு தொடர வாக்களிப்பீர் இரட்டை இலைச் சின்னத்திற்கே! வளர்ச்சிக்கு வாக்களிப்பீர்! வன்முறை கும்பலை புறந்தள்ளுவீர்! இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து