முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் இன்று 21-ம் தேதி இந்த இரண்டு தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் எம்.பி.யாகி இருப்பதால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதி காலியாக உள்ளது. இதற்கிடையே விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. எம்.எல்.ஏ. ராதாமணி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்ததால் அந்த தொகுதியும் காலி இடமாக இருந்தது. இந்த இரு தொகுதிகளுக்கும் இன்று 21-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன் ஆகியோரும், விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ் செல்வன், தி.மு.க. சார்பில் புகழேந்தி ஆகியோரும் களத்தில் உள்ளனர். 

தலைவர்கள் பிரச்சாரம்

இந்த நிலையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இரு தொகுதிகளிலும் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. முன்னதாக இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க.-தி.மு.க. மூத்த தலைவர்கள் கடந்த 2 வாரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மொத்தம் 6 நாட்கள் இரு தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டார். அதே போல் துணை முதல்வர் பன்னீர் செல்வமும் 15-ம் தேதி முதல் 6 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலினும் இரண்டு தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார்.

இதே போல் வைகோ, முத்தரசன், நல்லக்கண்ணு, பிரேமலதா, ஜி.கே.வாசன், சரத்குமார் உள்ளிட்ட தலைவர்களும் நாங்குநேரி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இன்று வாக்குப்பதிவு

நாங்குநேரி தொகுதியில் மொத்தம் 299 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த தொகுதியில் 1,400 பேர் ஓட்டுப்பதிவு பணிகளில் ஈடுபட உள்ளனர். பாதுகாப்புக்காக 800 போலீசார், 3 கம்பெனி துணைநிலை ராணுவத்தினர், 3 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் 225 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 1,331 பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். அங்கும் சுமார் 1000 போலீசார், 3 கம்பெனி துணைநிலை ராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். இரண்டு தொகுதிகளிலும் பதட்டமான ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.  

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது போல் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியிலும் நேற்று முன்தினம் இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. இடைத்தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்ததையடுத்து இன்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்த 3 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

சாகு பேட்டி

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம்.  அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. மேலும் தேர்தல் பார்வையாளர்கள் தங்கள் பணியில் ஈடுபடுவார்கள். இதுவரை நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் ஒரு கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம், நகை, மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுவரை அங்கு போடப்பட்ட வழக்குகள் மற்றும் புகார்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் இந்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நாங்குநேரியில் கைப்பற்றப்பட்ட 2.87 லட்சம் விவகாரத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமாருக்கு தொடர்பு இருப்பதாக கருதப்படும் நிலையில், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பெறப்பட்ட அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளோம். சீமான் சர்ச்சை பேச்சு குறித்தான அறிக்கையை மாவட்ட ஆட்சியர் வழங்குவார். இதனை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இன்று நடைபெறும் இடைத்தேர்தல் முடிவுகள் வரும் 24-ம் தேதி தெரியவரும்.

சட்டசபை தேர்தல்கள்

இதே போல் மராட்டியம், அரியானா மாநிலங்களில் இன்று 21-ம் தேதி சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதையடுத்து இந்த இரண்டு மாநிலங்களிலும் பிரதமர் மோடி சூறாவளி பிரச்சாரம் செய்தார். ராகுல் காந்தி ஒருசில நாட்கள் பிரச்சாரம் செய்த நிலையில் நேற்று முன்தினம் இந்த இரண்டு மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. இன்று அங்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து