தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற நாங்குநேரி, விக்கிரவாண்டியில் இன்று வாக்கு எண்ணிக்கை - பிற்பகலுக்குள் முடிவுகள் தெரியவரும்

புதன்கிழமை, 23 அக்டோபர் 2019      தமிழகம்
Vikravandi - Nankuneri 2019 09 30

சென்னை  : நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதையொட்டி வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று பிற்பகலுக்குள் முடிவுகள் தெரியவரும்.

தமிழகத்தில் காலியாக இருந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதை தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்யும் பணி தொடங்கியது. மனுக்கள் பரிசீலனைக்கு பின்னர் நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ராஜநாராயணன் உள்ளிட்ட  23 பேர் போட்டியிட்டனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ் செல்வன், தி.மு.க. சார்பில் நா. புகழேந்தி, நாம்தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி, தமிழ்பேரரசு கட்சி சார்பில் இயக்குனர் கவுதமன் உள்பட 12 பேர் போட்டியிட்டனர்.

கடந்த சில நாட்களாக அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வந்தது. அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். தி.மு.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தேர்தல் ஆணைய உத்தரவுப்படி கடந்த 19-ம் தேதி பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் வெளியூர்க்காரர்கள் தொகுதிகளில் இருந்து வெளியேறினார்கள். அதை தொடர்ந்து இந்த இரு தொகுதிகளிலும் கடந்த 21-ம் தேதி வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.

நாங்குநேரியில்...

வாக்குப்பதிவுக்காக நாங்குநேரி தொகுதி முழுவதும் 299 வாக்குச்சாவடிகளும், 688 வாக்குப்பதிவு எந்திரங்களும் அமைக்கப்பட்டு இருந்தன. நாங்குநேரி தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரத்து 414. இதில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 674 பேர் வாக்களித்தனர். அதாவது 66.10 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு ஓட்டு எந்திரங்கள் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இங்கு வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் 22 சுற்றுகளில் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. இதற்காக 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. நேரடியாக தேர்தல் அதிகாரிகள் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டியில்....

விக்கிரவாண்டி தொகுதி தேர்தலையொட்டி 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. பதட்டமான வாக்குச் சாவடிகளில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். விக்கிரவாண்டி தொகுதியில் மொத்த வாக்குகள் 2 லட்சத்து 23 ஆயிரத்து 387. இதில் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 659 வாக்குகள் பதிவாகின. இது 84.36 சதவீதமாகும். வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் போலீஸ் பாதுகாப்புடன் விழுப்புரம் முத்தாம் பாளையத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கலெக்டர் சுப்பிரமணியன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் இருந்த அறை பூட்டி சீல்வைக்கப்பட்டது. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணிக்கு இங்கும் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதற்காக அங்கு 14 மேஜைகள் போடப்பட்டுள்ளது. மொத்தம் 22 சுற்றுகள் எண்ணப்படுகிறது. சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரமும் தேர்தல் ஆணைய இணையத்தில் நேரடியாக அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் ஒரு ஏஜெண்டு மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்களுக்கு அனுமதி இல்லை. பிற்பகலுக்குள் முன்னணி நிலவரம் தெரிந்து விடும். ஓட்டு எண்ணிக்கையையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தடுப்புவேலியும் அமைக்கப்பட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து