Idhayam Matrimony

ஒரே நேரத்தில் 6 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி - தமிழக அரசு கோரிக்கை ஏற்பு: பிரதமருக்கு முதல்வர் நன்றி

புதன்கிழமை, 23 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஒரே நேரத்தில் 6 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளித்த பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களான விருதுநகர், இராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய ஆறு மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசின் அனுமதியும், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நிதியுதவியும் வழங்க பிரதமர் மோடியிடம் நான் கோரிக்கை வைத்து அதற்கான முன்மொழிவுகளை குறுகிய காலத்தில் தமிழ்நாடு அரசால் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய அரசு கோரியபடி மேற்படி மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க உடனடியாக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து, விரைவான நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தேன்.

எனது கோரிக்கையினை ஏற்று திருப்பூர், நீலகிரி, இராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களுக்கும் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு ஒரே நேரத்தில் 6 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவது ஒரு வரலாற்று நிகழ்வு ஆகும். இதற்கென 1,950 கோடி ரூபாய்க்கான மதிப்பீட்டிற்கு அனுமதி வழங்கி, அதில் 1,170 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு அனுமதியும் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பங்காக 780 கோடி ரூபாய் வழங்கப்படும். இதுவரை வரலாறு கண்டிராத இந்த சிறப்புமிக்க அனுமதியை வழங்கிய பிரதமருக்கும் மத்திய அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தமிழ்நாட்டு மக்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து