முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவனத்தோடு பணியாற்றினால் சிறப்பு சிற்பி கதை கூறி முதல்வர் விளக்கம்

புதன்கிழமை, 23 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : சின்னஞ்சிறு பணிகளிலும் மிகுந்த கவனத்தோடு பணியாற்றினால் சிறப்பாக அமையும் என்று சிற்பியின் கதை கூறி காவலர்களுக்கு முதல்வர் எட்பபாடி பழனிசாமி விளக்கினார்

இது குறித்து பதக்கங்கள் வழங்கும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறிய குட்டிக்கதை வருமாறு:

வேலையின் தரமும், வேலையை செய்தவரின் தரமும்பிரிக்க முடியாதவை. ஒருவிதப் பெருமை உணர்வுடன் ஒருவர் வேலை செய்யும் போதுதான் அந்த வேலை மிகச் சிறப்பாக இருக்கிறது. எந்தப் பணியையும் ஒவ்வொரு முறையும் சரியாகவே செய்யுங்கள். நாளைய சமுதாயத்திற்கான சிறந்த காப்புறுதி. இன்று நீங்கள் செய்யும் சிறப்பான பணிதான். இங்கு எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. சிற்பக் கலைஞர் ஒருவர் பல நாட்களாக ஒரு சிலையை செதுக்கிக் கொண்டிருந்தார். சிறு சிறு விஷயங்களில் கூட கவனம் செலுத்தி திரும்பத் திரும்ப ஒவ்வொன்றையும் திருத்திக் கொண்டிருந்தார். சிலையின் முழு உருவத்தையும் மிகவும் நேர்த்தியாக, அழகு மிளிர வடித்துக் கொண்டிருந்தார். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு அவரது செயல் தேவையற்ற வேலையாகத் தோன்றியது. அவரிடம், ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்று கேட்டனர். அதற்கு அந்தச் சிற்பி, எந்த வேலையைச் செய்தாலும் மற்றவர்களுக்காக மட்டுமல்லாமல் நமக்கு முழு திருப்திஅளிக்கும் விதமாகத் தான் செய்ய வேண்டுமென்றார்.

அந்தச் சிலையின் நளினத்தையும், நேர்த்தியையும் கண்டு அதனைக் கோவிலில் நிறுவினார் அந்நாட்டு மன்னர். ‚சின்னஞ்சிறு விஷயங்களில் கூட கவனம் செலுத்தினால் தான் நம் பணிநிறைவாக, சிறப்பாக அமையும் என்று கேலி பேசிய மக்கள் உணர்ந்தனர். இந்தக் கதையில் வரும் சிற்பக் கலைஞரைப் போல் நாம் எந்தப் பணியை மேற்கொண்டாலும்நமக்கு முழு திருப்தி அளிக்கும் விதமாகவும், நேர்த்தியாகவும் செயல்பட வேண்டுமென இத்தருணத்தில் உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அப்படி நாம் செயல்பட்டால் நமது பணிக்கான அங்கீகாரமும், விருதுகளும் தானாக உங்களுக்கு வந்து சேரும். சீருடைப் பணியாளர்களின் தியாகத்தையும், கடமை உணர்வையும் பாராட்டி, கௌரவிக்கும் வகையில் இப்பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. இது போன்ற நிகழ்வுகள், பதக்கங்களைப் பெறுவோருக்கு மேலும் சிறப்பாக பணிபுரிய ஊக்கமளிப்பதுடன், பிற பணியாளர்களுக்கும் நற்பணியாற்ற வேண்டும் என்ற உத்வேகத்தையும் அளிக்கிறது. இவ்வாறு முதல்வர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து