முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி தோல்வி: நாங்குநேரி, விக்கிரவாண்டியில் அ.தி.மு.க. அமோக வெற்றி - சட்டசபையில் அ.தி.மு.க.வின் பலம் உயர்ந்தது

வியாழக்கிழமை, 24 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

மதுரை : தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த இரண்டு தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் மண்ணைக் கவ்வியுள்ளனர். இந்த மாபெரும் வெற்றியின் மூலம் சட்டசபையில் அ.தி.மு.க.வின் பலம் 124- ஆக உயர்ந்துள்ளது. இந்த வெற்றியை தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.

இடைத்தேர்தல் ஏன்?

நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த ராதாமணி உடல்நலக்குறைவால் மரணமடைந்ததையடுத்து அந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதையடுத்து இந்த இரண்டு தொகுதிகளிலும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவித்தது. அதையடுத்து வேட்புமனு தாக்கல் செய்யும் பணி முதல் அனைத்து பணிகளும் நடைபெற்றன. நாங்குநேரியில் அ.தி.மு.க. வேட்பாளராக ரெட்டியார்பட்டி நாராயணன் களமிறங்கினார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன் நிறுத்தப்பட்டார். இதே போல் விக்கிரவாண்டியில் அ.தி.மு.க வேட்பாளராக முத்தமிழ்செல்வன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து தி.மு.க. வேட்பாளராக புகழேந்தி போட்டியிட்டார். இதையடுத்து இரண்டு தொகுதிகளிலும் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்தனர்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மொத்தம் 6 நாட்கள் பிரச்சாரம் செய்தார். இதே போல் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் 6 நாட்கள் பிரச்சாரம் செய்தார். அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகளும் பம்பரமாக சுழன்று பிரச்சாரம் செய்தனர். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் வைகோ போன்றவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

வாக்குப்பதிவு

இந்த பிரச்சாரம் கடந்த 19-ம் தேதி முடிவுக்கு வந்தது. அதையடுத்து 21-ம் தேதி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. கொட்டும் மழையிலும் நாங்குநேரி தொகுதியில் மக்கள் வாக்களித்தனர். விக்கிரவாண்டி தொகுதியிலும் விறுவிறுப்பான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. நாங்குநேரியில் 66.35 சதவீதமும், விக்கிரவாண்டியில் 84.36 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

வாக்கு எண்ணிக்கை

பதிவான இந்த வாக்குகள் நேற்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. இதில் தொடக்கத்தில் இருந்தே அ.தி.மு.க. வேட்பாளர்கள் முன்னணியில் இருந்து வந்தனர். இறுதியில் இந்த இரண்டு தொகுதிகளையுமே அ.தி.மு.க. கைப்பற்றியது. அதாவது, காங்கிரஸ் வசமிருந்த நாங்குநேரி தொகுதியையும், தி.மு.க. வசமிருந்த விக்கிரவாண்டி தொகுதியையும் அ.தி.மு.க.வே கைப்பற்றியது. நாங்குநேரி தொகுதியில் 18 ஆண்டுகளுக்கு பிறகு அ.தி.மு.க. வெற்றிக்கனியை சுவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நாங்குநேரி தொகுதி

ரெட்டியார்பட்டி நாராயணன் (அ.தி.மு.க.) --- 95,377 வாக்குகள்
ரூபி மனோகரன் (காங்.) ----- 61,932 வாக்குகள்
அதாவது அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணன் 33,445 வாக்குகள் வித்தியாசத்தில் நாங்குநேரி தொகுதியில் அமோக வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ரூபி மனோகரன் தோல்வி அடைந்தார். இதே தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு வெறும் 3,494 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.
விக்கிரவாண்டி தொகுதி
முத்தமிழ்செல்வன் (அ.தி.மு.க.) ----- 1,13,766 வாக்குகள்
புகழேந்தி (தி.மு.க) ---- 68,842 வாக்குகள்

அதாவது விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 44,924 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற இவர் அதற்கான சான்றிதழை பெற்றவுடன் விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபட்டார். இந்த இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றதன் மூலம் தமிழக சட்டசபையில் அதன் பலம் 124 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியை அ.தி.மு.க. தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும் பட்டாசு வெடித்து கொண்டாடினர். குறிப்பாக சென்னை தலைமை கழகத்தில் உற்சாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கு திரண்டிருந்த தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து