முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இதே உற்சாகத்தோடு உள்ளாட்சித் தேர்தலிலும் பணியாற்றி அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்வோம் - தொண்டர்களுக்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். கடிதம்

வியாழக்கிழமை, 24 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : இதே உற்சாகத்தோடு எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் பணியாற்றி அ.தி.மு.க. ஆயிரங்காலத்துப் பயிராக தழைத்து மக்கள் பணியாற்றும் என்ற

ஜெயலலிதாவின் கனவை நனவாக்குவோம் என்று தொண்டர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி. துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர். 

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியிலும், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறார்கள். எம்.ஜி.ஆரின் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னம் தமிழக மக்களின் பேரன்பை பெற்ற சின்னம் என்பது மீண்டும் உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. தமிழக மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்த ஜெயலலிதா அரும்பாடுபட்டு அமைத்து தந்த அ.தி.மு.க. அரசு. ஜெயலலிதாவின் பாதையில் மக்கள் பணியாற்றுவதை பாராட்டும் விதமாக விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க. பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கிறது.

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 1,13,766 வாக்குகளைப் பெற்று, 44,924 வாக்குகள் வித்தியாசத்திலும், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 95,377 வாக்குகளைப் பெற்று, 33,445 வாக்குகள் வித்தியாசத்திலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பெற்றிருக்கும் இந்த வெற்றியை மிகுந்த நன்றியுணர்ச்சியோடு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கு காணிக்கையாக்கி மகிழ்கிறோம். இடைத் தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளின் வாக்காளப் பெருமக்களுக்கு எங்களுடைய இதயமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த இரண்டு தொகுதிகளின் வாக்காளர்கள் மட்டுமின்றி, தமிழ் நாடு முழுவதும் உள்ள அனைவரது அன்பையும், ஆதரவையும் தொடர்ந்து பெறும் வகையில் அ.தி.மு.க. அரசு மக்கள் பணியாற்றும் என்று உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜனநாயக ஆட்சி முறையில் தேர்தல் வெற்றி என்பது மக்கள் அளிக்கும் நற்சான்றுப் பத்திரமாகும். கொள்கைகளில் சற்றும் சமரசம் இன்றி, தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், தமிழ்நாட்டு மக்களின் வளமான வாழ்க்கைக்கும், அமைதியான சமூக சூழலை உறுதி செய்யவும், இந்தியாவிலேயே அனைத்துத் துறைகளிலும் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டவும், எங்களால் இயன்றது அனைத்தையும் செய்வோம் என்று உறுதி கூறுகிறோம்.

இந்த இடைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளின் வாக்காளர்கள் அ.தி.மு.க. அரசுக்கு வழங்கி இருக்கும் நற்சான்றிதழ் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும், எதிர்காலத்தில் இன்னும் சிறப்புடன் பணியாற்றத் தேவையான உறுதியையும் அளிப்பதாக இருக்கிறது. வாக்காளப் பெருமக்களே, உங்களின் பேராதரவுக்கு மிக்க நன்றி. உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தொடர்ந்து செயல்படுவோம். அதுவே, ஜெயலலிதாவுக்கு நாங்கள் செலுத்தும் நன்றிக் கடனாகும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

இந்த இடைத் தேர்தலில் மட்டுமல்லாமல், அ.தி.மு.க.வின் கட்டளைகளை ஏற்று தங்களுக்கு வழங்கப்படும் அனைத்துப் பணிகளையும் அயராது செய்து முடிக்கும் அமைச்சர்களுக்கும் , தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும், மாவட்ட செயலாளர்களுக்கும், எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்களுக்கும் , முன்னாள் அமைச்சர்களுக்கும், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் நாங்கள் எப்படி நன்றி சொல்லப் போகிறோம்? இது நமது வெற்றி. எம்.ஜி.ஆரின் வெற்றி. ஜெயலலிதாவின் வெற்றி. இதே உற்சாகத்தோடு எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் பணியாற்றி அ.தி.மு.க. ஆயிரங்காலத்துப் பயிராக தழைத்து மக்கள் பணியாற்றும் என்ற ஜெயலலிதாவின் கனவை நனவாக்குவோம்.

இந்த இடைத் தேர்தலுக்கான பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு உழைத்திட்ட, பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, புதிய நீதிக் கட்சி, தமிழ் நாடு கொங்கு இளைஞர் பேரவை, கொங்குநாடு முன்னேற்றக் கழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், புரட்சி பாரதம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, மனித உரிமை காக்கும் கட்சி, தமிழ் மாநில முஸ்லீம் லீக், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மற்றும் நல்லாதரவு வழங்கிய அமைப்புகள் அனைத்திற்கும் எங்களது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வரும், துணை முதல்வரும் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து