முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 29-ம் தேதி பதவியேற்பு: சபாநாயகர் தனபால் முன்னிலையில் நடக்கிறது

வெள்ளிக்கிழமை, 25 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் தனபால் முன்னிலையில் வரும் 29-ம் தேதி பதவியேற்கின்றனர்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டசபைத்தொகுதிகளின் இடைத்தேர்தல் கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக ரெட்டியார்ப்பட்டி நாராயணனும், விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக முத்தமிழ்ச்செல்வனும் போட்டியிட்டனர். இத்தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். நாங்குநேரி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை, கடந்த 24-ம் தேதி நெல்லையில் உள்ள பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் காங்கிரஸ் வேட்பாளர் ருபி மனோகரனை விட 33, 445 வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றார். விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியை விட 44 ஆயிரத்து 924 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன்மூலம் சட்டமன்றத்தில் அ.தி.மு.க.வின் பலம் 125 ஆக உயர்ந்திருக்கிறது. தமிழக அரசியலில் இந்த இடைத்தேர்தல் வெற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அ.தி.மு.க.வுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் வெற்றி பெற்ற நாங்குநேரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் வரும் 29-ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் முன்னிலையில் பதவியேற்கின்றனர். இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எம்.சி. சம்பத், விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், ஜெயகுமார், செல்லூர் கே.ராஜூ, ராஜலட்சுமி, கே.டி. ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இதன் பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்துகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து