முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 ஆயிரத்து 774 தீபாவளி பேருந்துகளில் 4.64 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம் - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தகவல்

சனிக்கிழமை, 26 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தீபாவளிக்காக இயக்கப்படும் 5 ஆயிரத்து 774 சிறப்பு பேருந்துகளில் 4 லட்சத்து 64 ஆயிரம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தீபாவளித் திருநாளை முன்னிட்டு, பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்கின்ற வகையில், 24, 25 மற்றும் 26. ஆகிய நாட்களில், சென்னையிலிருந்து 10,940 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 10,646 பேருந்துகள் என ஆக மொத்தம் 21,586 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் வரை 1,53,752 பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். இதில், சென்னையிலிருந்து 60,069 பயணிகளும், பிற ஊர்களிலிருந்து 93,683 பயணிகளும் முன்பதிவு செய்திருந்தனர். இதனால், போக்குவரத்துக் கழகத்திற்கு 7 கோடியே 54 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கப்பெற்றுள்ளது.

24.10.2019 அன்று சென்னையிலிருந்து 2,968 பேருந்துகளில் 1,37,343 பயணிகள் பயணம் செய்துள்ளனர். மேலும், நேற்று இரவு 9 மணி வரையில் சென்னையிலிருந்து 2,806 பேருந்துகளில், 1,40,809பயணிகள் என ஆக மொத்தம் 5,774 பேருந்துகளில் 4 லட்சத்து 64 ஆயிரம் பயணிகள் பயணம் செய்துள்ளனர் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தீபாவளித் திருநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதை கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில், கட்டுப்பாட்டு அறை, முன்பதிவு மையங்கள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக நடைமேடை மற்றும் அனைத்து நடைமேடைகளுக்கும் சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளின் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் அமர்ந்திருந்த பயணிகளிடம் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். முன்பதிவு மையத்தில் ஆய்வு செய்த போது மதுரைக்கான பேருந்துகள் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டு விட்ட காரணத்தினால், மதுரைக்குச் செல்ல காத்திருந்த அதிகப்படியான பயணிகளின் கோரிக்கையினை ஏற்று, உடனடியாக ஒரு பேருந்தினை மதுரைக்கு இயக்கிட அமைச்சர் உத்தரவிட்டார்.

கன்னியாகுமரி, நாகர்கோயில், திருநெல்வேலி, மதுரை, தேனி, கம்பம், வேளாங்கன்ணி, நாகப்பட்டினம் உள்ளிட்டதொலைதூரப் பேருந்துகளில் இருந்த பயணிகள், அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த முறையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு, தாங்கள் சொந்த ஊர்களுக்கு எந்தவித சிரமமுமின்றி பயணிப்பதாக தெரிவித்ததோடு, அமைச்சரை வெகுவாக அனைவரும் பாராட்டி நன்றியும் தெரிவித்தனர்.

குறிப்பாக, மணிப்பூரில் பணிபுரியும் ராணுவ அதிகாரி, பண்டிகையை முன்னிட்டு நாகர்கோயில் செல்ல முன்பதிவு செய்ததாகவும், உரிய நேரத்தில் பேருந்து நிலையத்தினை அடைய இயலாத நேரத்தில், ஓட்டுநர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 5 நிமிடத்திற்கு மேல் நாங்கள் பேருந்தில் பயணிக்க காத்திருந்தது உள்ளபடியே மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்து, தமிழக அரசுக்கு தனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்தார்.

அப்போது போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,  தீபாவளி பண்டிகைக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது. குறிப்பாக, 8 லட்சம் பயணிகள் இந்த பண்டிகை காலங்களில் பயணித்திட ஏதுவாக அனைத்து விதமான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து