முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 லட்சம் கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் இ.பி.எஸ். கடிதம்

சனிக்கிழமை, 26 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : 4 லட்சம் கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க சர்க்கரைத் தொழிலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் சர்க்கரை தொழிலும், கரும்பு உற்பத்தியாளர்களும் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக செப்டம்பர் 10-ம்தேதி கூட்டத்தை நீங்கள் நடத்தியிருக்கிறீர்கள். இதன் மூலம் கரும்பு உற்பத்தியாளர்களுக்கும் சர்க்கரை தொழிலுக்கும் புதிய நம்பிக்கை மலர்ந்திருக்கிறது. தங்களது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் தெரிவித்த யோசனையின்படி சென்னையில் செப்டம்பர் மாதம் 24-ம் தேதி மத்திய அரசின் பிரதிநிதிகள், தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள், இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளின் மூத்த பிரதிநிதிகள், சிஸ்மா சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய உயர்மட்ட கூட்டத்தை நடத்தினோம். இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் சர்க்கரை தொழில் எதிர்நோக்கியிருக்கும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதே போல நெருக்கடியிலிருந்து சர்க்கரை தொழிலை காப்பாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் உத்தேசிக்கப்பட்டப்படி சர்க்கரை ஆலைகளை சீரமைக்கும் வகையில் அவற்றின் கடன் பிரச்னைகள் குறித்து சென்னையில் செப்டம்பர் மாதம் 30-ம் தேதி விசேஷ கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் சர்க்கரை ஆலைகள் சீரமைப்பு குழு ஒன்றை அமைப்பது என முடிவெடுக்கப்பட்டது. மேலும் வங்கிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தரவேண்டிய கடன் தொகைகளை திருத்தி அமைப்பதற்கான வழிமுறைகளை கண்டறிவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

நடப்பு ஆண்டுக்கு சராசரி அளவு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிற காரணத்தாலும் நடப்பு ஆண்டில் கரும்பு சாகுபடி பருவத்தில் கரும்பு சாகுபடி அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகள் முழு உற்பத்தி திறன் அளவை எட்ட முடியுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு சர்க்கரை தொழிலின் மொத்த உற்பத்தி திறன் அடுத்த ஆண்டுக்கு அதாவது (2020 21ல்) 45 சதவீதத்திலிருந்து 50 சதவீதத்திற்கும் குறையாமல் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சர்க்கரை ஆலைகள் வலிமை பெறும்.

தமிழ்நாடு சர்க்கரை தொழில் சீரமைப்புக்கு கீழ்காணும் நடவடிக்கைகள் அவசியமாகிறது. சர்க்கரை தொழில் வங்கிகளிலிருந்து நிதி நிறுவனங்களிலிருந்து பெற்றிருக்கும் கடன்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டும். இதே போல தனியார் மற்றும் கூட்டுறவு ஆலைகள் வாங்கியிருக்கும் எஸ்.டி.எப். கடன்களும் திருத்தியமைக்கப்பட வேண்டும். சர்க்கரை ஆலைகளின் நிதி கடன் பொறுப்புக்களை மேம்படுத்தும் விதத்தில் விசேஷ நடவடிக்கையாக தமிழ்நாட்டில் உள்ள ஆலைகளுக்கு கூடுதல் சர்க்கரையை வழங்க மத்திய அரசு அனுமதிக்கலாம்.

கரும்பு விவசாயிகள் ஏற்கனவே வாங்கியிருக்கும் முந்தைய கடன்களை திருப்பி செலுத்தாவிட்டாலும் விவசாயிகளுக்கு கடன்கள் வழங்க வேண்டுமென்று வங்கிகள் அறிவுறுத்தப்பட வேண்டும். ஆகவே தமிழ்நாட்டில் சுமார் 4 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விதத்தில், தமிழ்நாடு சர்க்கரை தொழிலை சீரமைப்பது சம்பந்தமாக மத்திய அரசு எங்களுக்கு ஆதரவான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். அது போல தொடர்ந்து ஆதரவு அளித்திட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து