முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிலி நாட்டில் சீர்திருத்தம் கோரி 10 லட்சம் பேர் திரண்டு பேரணி

திங்கட்கிழமை, 28 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

சிலி நாட்டில் சீர்திருத்தம் கோரி, தலைநகரான சாண்டியாகோவில் 10 லட்சம் பேர் திரண்ட பிரமாண்ட பேரணி நடந்தது.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் செல்வச்செழிப்புள்ள நாடாக சிலி நாடு திகழ்கிறது. ஆனால் அங்கு வருமான சமத்துவம் இல்லாத நிலை உள்ளது.ஓ.இ.சி.டி என்று அழைக்கப்படுகிற பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் 36 உறுப்பு நாடுகளில், சிலிதான் மிக மோசமான வருமான சமத்துவம் இல்லாத நாடு என்று கூறப்படுகிறது.அங்கு முதலில் மெட்ரோ ரயில் கட்டண உயர்வை எதிர்த்து போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டங்களில் தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. கொள்ளைகள் நடந்தன. ஒரு வாரத்துக்கு முன்பு தொடங்கிய இந்த போராட்டத்தில் 16 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். 7 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இந்த பெரும் போராட்டத்தின் காரணமாக மெட்ரோ ரெயில் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. தலைநகர் சாண்டியாகோவில் பாதுகாப்பை ராணுவம் எடுத்துக் கொண்டது. அங்கு நெருக்கடி நிலையும் அமல்படுத்தப்பட்டது. இரவு நேரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 20 ஆயிரம் போலீசார், வீதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அங்கு வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு, சமத்துவம் இல்லாமை ஆகியவற்றால் ஏற்படுகிற அவதிகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல பிரமாண்ட அமைதிப்பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு ஆனது. தலைநகர் சாண்டியாகோவில் அந்த பேரணி நடந்தது. 10 லட்சம் பேர் திரண்டதால் அந்த நகரமே குலுங்கியது. இது குறித்து சாண்டியாகோ கவர்னர் கர்லா ரூபிலர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், புதிய சிலிக்கான கனவை போராட்டக்காரர்கள் பிரதிபலித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

சிலி அதிபர் செபாஸ்டியன் பினேரா டுவிட்டரில் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் அனைவரும் மாறி விட்டிருக்கிறோம். இந்த பேரணி மகிழ்ச்சிகரமானது; அமைதிப் பேரணி. இதில் சிலி மக்கள் மிகவும் நியாயமான, ஒன்றுபட்ட சிலியை கேட்கிறார்கள். இது எதிர்காலத்தில் நம்பிக்கைக்கான பாதைகளை திறக்கிறது என குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து