முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் தலைவாசலில் உலகத்தர கால்நடை பூங்கா அமைக்கும் திட்டம் - அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை

திங்கட்கிழமை, 4 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : சேலம் தலைவாசலில் சுமார் 1000 - ஏக்கரில் உலகத்தரம் வாய்ந்த கால்நடைப் பூங்கா அமைக்கும் திட்டம் குறித்து நேற்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் சேலம், தலைவாசலில் அமைக்கப்படவுள்ள உலகத்தரம் வாய்ந்த கால்நடைப் பூங்கா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கே.டி. ராஜேந்திர பாலாஜி, தலைமைச் செயலாளர் க.சண்முகம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் ச.கிருஷ்ணன், கால்நடைப் பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலாளர் கே.கோபால், எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) தீரஜ்குமார், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் நிர்வாக இயக்குநர் சி.காமராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் சி.என்.மகேஸ்வரன், கால்நடைப் பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறை இயக்குநர் ஏ.ஞானசேகரன், மீன்வளத்துறை இயக்குநர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.பாலச்சந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சமீபத்தில் அமெரிக்கா சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்குள்ள பஃபல்லோ கால்நடை பண்ணைக்கு சென்று பார்வையிட்டார். அங்குள்ள தொழில்நுட்பத்தை கேட்டறிந்தார். பல்வேறு நாட்டு இன மாடுகளின் மரபணு பராமரிப்பு மற்றும் அந்த மரபணுவைக் கொண்டு, அதிகமாக பால் தரக்கூடிய கலப்பின மாட்டு இனங்கள் உருவாக்கும் தொழில்நுட்பத்தையும், நோய் எதிர்ப்பு சக்தி உடைய புதிய ரக கலப்பின மாடுகள் மற்றும் ஆடுகளை உருவாக்கும் தொழில்நுட்பத்தையும், பால் மற்றும் இதர பொருட்களை பதப்படுத்துதல் போன்ற தொழில்நுட்பங்களை ஆய்வு செய்து, இந்தப் புதிய தொழில்நுட்பங்களை, சேலம் மாவட்டம், தலைவாசலில் அமைக்கப்படவுள்ள உலகத்தரம் வாய்ந்த கால்நடைப் பூங்காவில் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் முதல்வர் கேட்டறிந்தார்.மேலும், அப்பண்ணையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தாழ்வான கொட்டகை அமைப்பு, சிறந்த எரு மேலாண்மை, ஒவ்வொரு கறவை பசுவும் நிரந்தரமாக அடையாளம் காணுதல், உடல்நலம் பராமரிப்பு, சமச்சீர் தீவனம், தீவன வங்கிகள், பண்ணைப் பதிவேடு முறைகள், வெப்பம் மற்றும் குளிரினால் ஏற்படும் அயர்ச்சிகளைக் குறைக்கும் வழிமுறைகள், புதிதாக பிறந்த கன்றுகளின் உடல்நலம் சார்ந்த குறிப்பேடுகள், தடுப்பு ஊசி அட்டவணை, கன்று ஈனல், மடிவீக்க நோய், கருப்பை அழற்சி நோய், வளர்சிதை மாற்ற நோய்கள் மற்றும் பிற தொற்று நோய்களுக்கு எதிராக அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றியும் முதல்வர் கேட்டறிந்தார்.இந்த கால்நடை பூங்கா ரூ.396 கோடியில் செலவில் மிக பிரமாண்டமாக அமைக்கப்படுகிறது. கால்நடை பூங்கா அமைப்பதற்கான முன் சாத்திய கூறு ஆய்வு மற்றும் விரிவான திட்ட அறிக்கைகள் தயாரித்து அரசுக்கு அறிக்கை தர நபார்டு நிறுவனத்தின் துணை அமைப்பான நாப்கான்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

3 பிரிவுகளாக அமையவுள்ள இந்தப் பூங்காவின் முதலாவது பிரிவில் நவீன வசதிகளைக் கொண்ட கால்நடை மருத்துவமனை, நவீன பண்ணை முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துக் காட்டும் வகையில் கறவை மாட்டுப் பண்ணை, உள்நாட்டு மாட்டினங்களான காங்கேயம், உம்பளாச்சேரி, கோழியினப் பிரிவுகள் மற்றும் நாட்டின நாய் ஆகியவற்றுக்கான இனப்பெருக்கப் பிரிவுகளைக் கொண்ட கால்நடை பண்ணை வளாகம் அமைக்கப்பட உள்ளது.இரண்டாம் பிரிவில், பால், இறைச்சி, மீன் மற்றும் முட்டை போன்ற உணவுப் பொருட்களைப் பாதுகாத்து பதப்படுத்தவும், அவற்றிலிருந்து பல்வேறு உபபொருட்கள், மதிப்பு கூட்டிய பொருட்களைத் தயார் செய்யவும், அவற்றை சந்தைப்படுத்த வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.மூன்றாவது பிரிவில் பயிற்சி, விரிவாக்கம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில் முனைவோருக்கான பயிலரங்கத்துடன் பல்வேறு அம்சங்கள் கொண்ட வளாகம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து